Saturday, January 28, 2012

இந்தியாவும் அமெரிக்காவும் கூறுகின்றது என்பதற்காக மாகாண சபைகளுக்கு எல்லை மீறிய அதிகாரங்களை வழங்க முடியாது-சம்பிக்க ரணவக்க!

Saturday, January 28, 2012
இலங்கை::இந்தியாவும் அமெரிக்காவும் கூறுகின்றது என்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் சென்று அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க இயலாது. குறிப்பாக மாகாண சபைகளுக்கு எல்லை மீறிய அதிகாரங்கள் வழங்குவதை அனுமதிக்க முடியாது என அமைச்சரும் ஜாதிக ஹெல உறு மயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்கான தீர்வில் ஏனைய கட்சிகளினதும் அமைப்புக்களினதும் ஆதரவு பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தன்னிச்சையாக செயற்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைகளுக்கு மேலதிகமான அதிகாரங்களை வழங்குவது என்பது மிகவும் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும். காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை அரசியல் தீர்வாக வழங்குவதற்கு ஜாதிக ஹெல உறுமய கொள்கை ரீதியாகவே எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் நடைறைப்படுத்தும்போது அது நாட்டிற்கு ஆபத்தானதாகவே அமையும்.

எனவே புதிய திருத்தங்களுக்கு அது உட் படுத்தப்பட வேண்டும். உதாரணமாக சூழலுக்கான விசேட சட்ட மூலம் 1988 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டாலும் அதனை 1991 ஆம் ஆண்டே நடைறைப்படுத்த முடிந்தது. சூழலுக்கு எல்லை நிர்ணயம் செய்ய இயலாது. இந்தியாவில் சூழல் பாதிக்கப்பட்டால் அது இலங்கையையும் தாக்கும் என்பதே உண்மை.

அரசியல் தீர்வு விடயத்தில் ஏனைய நாடுகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட முடியாது. ஜே.ஆர். ராஜீவ் ஒப்பந்தம், சந்திகா பிரபாகரன் ஒப்பந்தம், ஜீ.எல். பாலசிங்கம் ஒப்பந்தம் போன்றவைகளால் நாட்டிற்கு தேவையற்ற பிரச்சினைகளே வந்தன. இந்த நிலையை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது எனவும் சம்பிக்க ரணவக்க கூறினார்.

0 comments:

Post a Comment