Saturday, January 28, 2012லக்னோ::அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும். அதில், பாஜ உறுதியாக இருக்கிறது’ என்று உபி.யில் நேற்று வெளியிடப்பட்ட அதன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரச்னையை கடந்த 80, 90ம் ஆண்டுகளில் பாஜ கடுமையாக கிளப்பி வந்தது. ராமர் கோயில் கட்ட அது எடுத்த முடிவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிராக கைகோர்த்து நின்றன. பின்னர், படிப்படியாக இப்பிரச்னையை பாஜ கிடப்பில் போட்டது. இந்த நிலையில், உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராமர் கோயில் கட்டும் சர்ச்சையை மீண்டும் அது கையில் எடுத்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 8ம் தேதியில் இருந்து 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் அறிக்கையை லக்னோவில் பாஜ நேற்று வெளியிட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் உமாபாரதி, கல்ராஜ் மிஸ்ரா, முக்தார் அப்பாஸ் நக்வி, மாநில பாஜ தலைவர் சாகி ஆகியோர் இதை வெளியிட்டனர்.
அதில், ‘பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 4.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிப்பதை பாஜ கடுமையாக எதிர்க்கிறது. உபி.யில் பாஜ ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும். பாஜ அதில் உறுதியாக இருக்கிறது. இந்த கோயிலை கட்டுவது, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையுடன் பிணைந்தது. ராமர் இந்த நாட்டின் பெருமைக்குரியவர். கோயில் கட்டுவதற்கு தடையாக உள்ள எல்லா முட்டுக்கட்டைகளையும் பாஜ தகர்த்தெறியும்’ என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் புதிய முயற்சி
உ.பி.யில் காங்கிரசால் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இத்தேர்தலில் அதிக இடங்களை பிடிக்கும் முயற்சியில் அது ஈடுபட்டுள்ளது.
அதற்காக, இம்மாநில மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, புதிய உத்தர பிரதேசம், புதிய மேம்பாடு என்ற கோஷத்துடன் கூடிய 9 அம்ச அறிக்கையை மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் நேற்று அது வெளியிட்டது.
அதில், நீதி, மேம்பாடு, உரிமை, வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம், பெண்கள் அதிகாரம், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிக அதிகாரம் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. விவசாயிகளுக்கு பகலில் பாசனத்துக்கும், இரவில் வீட்டுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment