மதுரை::திமுகவினரை பழிவாங் கும் நோக்குடன் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. அதை சட்டபூர்வமாக சந்திப்போம் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார். மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு இன்று 61வது பிறந்த நாள். இதையொட்டி திமுக தலைவர் கருணாநிதி, தயாளு அம்மாள் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மதுரை சத்யசாய் நகரில் உள்ள வீட்டில் இன்று காலை அழகிரி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் உள்ள மகாராஜா கல்யாண மண்டபத்தில் நகர், புறநகர் மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் 16 ஆயிரத்து 661 ஏழைகளுக்கு அழகிரி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
அரசியல் ரீதியாக எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
போகப்போக நீங்களே தெரிந்து கொள்வீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்.
திமுக உயர்நிலைக்குழு கூட்டம் வரும் 2ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறதே?
இதுவரை எனக்கு தெரியாது.
எத்தகைய ஆட்சி வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
மக்கள் எதிர்காலம் சிறக்க வேண்டும். மக்கள் நலனே என்றும் திமுகவுக்கு முக்கியம். அப்படிப்பட்ட ஆட்சிதான் தேவை. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அமைச்சராக இருந்து நான் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். அமைச்சர் பொறுப்பில் இல்லாத நேரத்திலும் என்னுடைய பிறந்த நாள் விழாக்கள் மூலம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி உள்ளேன். இது மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னை 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற செய்தனர்.
திமுகவில் மூன்று முறை மாவட்ட செய லாளர் பதவியில் இருப்பவர்கள் மாற்றப்படலாம் என்று செய்தி வந்துள்ளதே?
பத்திரிகைகளில் எதை எதையோ எழுதுகின்றனர். என்னுடைய மகனை இளைஞரணி பதவிக்கு கொண்டு வர நான் முயற்சிப்பதாக கூட ஒரு பத்திரிகையில் எழுதியுள்ளனர்.
அது தவறு. நானே பதவிக்கு ஆசைப்படாதவன். என்னுடைய மகனுக்கு நான் எப்படி பதவி வேண்டும் என்று கேட்பேன்?
தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி உங்கள் கருத்து?
வேண்டுமென்றே திமுகவினர் மீது பழிவாங்கும் நோக்குடன் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. இதை சட்டப்பூர்வமாக சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அழகிரி கூறினார்.
No comments:
Post a Comment