ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதுரை போலீஸ்காரர் உமா சங்கர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவரது தற்கொலை முயற்சியில் மர்மம் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் உமாசங்கர், 25. மதுரை ஆறாவது பட்டாலியன் பிரிவை சேர்ந்த இவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன் ராமநாதபுரம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாம் பாதுகாப்பு பணிக்காக வந்தார்.
ஏ.டி.ஜி.பி.,(ஜாபர்சேட்) அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, இவர் நேற்று காலை 7.30 மணிக்கு அரளி விதைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதுகுறித்து அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் கூறுகையில், ""4 லட்ச ரூபாய் கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றேன்,'' என்றார்.
சில போலீசார் கூறுகையில், ""மண்டபம் முகாம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் போலீசாருக்கு ஆண்டுக்கு 22 நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் மதுரையை சேர்ந்த முத்துச்சாமி என்ற போலீஸ்காரர், யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் எங்கோ சென்று விட்டார், என்றனர்.
போலீசாருக்கு டூட்டி வழங்கும் கேம்ப் இன்ஸ்பெக்டர் ஜெக்தரட்சகன் கூறுகையில், ""வயிற்று வலியாக அவதிப்பட்டு வந்த உமாசங்கர், பூவரசங்காயை அரைத்து குடித்திருக்கிறார்,'' என்றார்.
No comments:
Post a Comment