Sunday, January, 01,2012மும்பை: கடந்த ஆண்டு மும்பை போலீசுக்கு நல்ல ஆண்டாக முடிந்தது. ஏனெனில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு என்கவுன்டர் கூட நடக்காத ஆண்டாக இது இருந்தது.நாட்டின் பிரபல தாதாக்கள், ரவுடிகள், மோசடி பேர்வழிகள் மும்பையில்தான் அதிகம் உள்ளனர். மும்பை போலீசாருக்கு எப்போதுமே இவர்கள் பெரிய சவாலாக இருப்பார்கள். போலீசார் என்கவுன்டர் நடத்துவது சாதாரண விஷயம். 2001ம் ஆண்டில் இருந்து இதுவரை 272 கிரிமினல்கள், தீவிரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். சோட்டா ராஜன் கும்பலை சேர்ந்த 97 பேரும், தாவூத் இப்ராகிம் கோஷ்டியை சேர்ந்த 46 பேரும் பல்வேறு என்கவுன்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். போலீஸ் அதிரடி தொடர்ந்ததால், தாதா கோஷ்டிகள் எல்லாம் இப்போது அடக்கி வாசிக்கின்றன. பெரிய தாதாக்கள் நாட்டை விட்டே ஓடி விட்டனர். பலர், தலைமறைவு வாழ்க்கை வாழ்கின்றனர். இதனால், போலீசாரின் என்கவுன்டரும் படிப்படியாக குறைந்து விட்டது. 2010ல் 7 கிரிமினல்கள் மட்டுமே என்கவுன்டர் செய்யப்பட்டனர். 2011ல் ஒரு என்கவுன்டர் கூட நடக்கவில்லை. 1991க்குப் பிறகு ஒரு என்கவுன்டர் கூட நடக்காத ஆண்டு இதுதான்.மும்பையை மிரட்டிக் கொண்டிருந்த பெரும்பாலான தாதாக்கள் 2001க்கு பிறகு கொல்லப்பட்டு விட்டனர் அல்லது வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டனர். என்கவுன்டர் களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததற்கும், 2011ல் ஒரு என்கவுன்டர் கூட நடக்காததற்கும் இதுவே முக்கிய காரணம். என்கவுன்டர்களில் ஈடுபட்டு வந்த பல அதிகாரிகளை பல்வேறு காரணங்களுக்காக மும்பை போலீஸ் கடந்த சில ஆண்டுகளில் இழந்துள்ளது. இன்ஸ்பெக்டர்கள் விஜய் சலாஸ்கர், பிரதீப் சர்மா, பிரபுல் போசலே ஆகியோர்தான் 99 சதவீதம் என்கவுன்டர்களை நடத்தினர். ஆனால், 2008 நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது சலாஸ்கர் கொல்லப்பட்டார். போலி என்கவுன்டர் வழக்கு தொடர்பாக சர்மா கைது செய்யப்பட்டார். குண்டு வெடிப்பு குற்றவாளி கவாஜா யூனுஸ், என்கவுன்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக போசலே கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு பணியில் சேர்ந்தார். சச்சின் வேஸ் என்ற என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் பதவியை ராஜினாமா செய்தார். மற்றொரு ஸ்பெஷலிஸ்ட்டான சீனியர் இன்ஸ்பெக்டர் அருண் போருடே, மைனர் பெண் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்தார். பின்னர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 1990களில் மற்றும் 2000 தொடக்கத்தில் தாதா கும்பல்களின் அட்டூழியம் எல்லை மீறி போனது. பணம் கேட்டு மிரட்டி ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், பில்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை சுட்டுக் கொன்றனர். மும்பையில் பீதியை ஏற்படுத்த அவர்கள் முயன்றனர். இதைத் தொடர்ந்துதான் அவர்களுக்கு எதிராக என்கவுன்டர் ஆயுதத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு மும்பை போலீசார் தள்ளப்பட்டனர்.
No comments:
Post a Comment