Monday, January 2, 2012

ஆயுதப் படை சட்டத்தை ரத்து செய்தால் பயங்கரவாதம் அதிகரிக்கும்: எச்சரிக்கிறார் ராணுவ தளபதி வி.கே.சிங்!

Monday, January 02, 2012
புதுடில்லி::காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்தால், பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கும். பயங்கரவாதிகளின் சரணாலயமாக, புகலிடமாக காஷ்மீர் உருவாகி விடும்,'' என, ராணுவ தளபதி ஜெனரல் வி.கே.சிங் கூறியுள்ளார்.

ராணுவ அமைச்சகம் சார்பில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் ஒரு கோடை காலத்தில் அமைதி நிலவி விட்டது என்பதால், அங்கு மாமூல் நிலைமை திரும்பி விட்டதாக நம்பக் கூடாது. காஷ்மீரில் அமலில் உள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்தால், நிலைமை மோசமாகும் போது, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, ராணுவத்தினரால் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாது.

சில பகுதிகளில் ஆயுதப் படை சட்டத்தை ரத்து செய்தாலும், அந்தப் பகுதிகள் பயங்கரவாதிகளின் சரணாலயமாக, அவர்களின் புகலிடமாக மாறிவிடும். இதுமட்டுமின்றி, ராணுவத்தினரின் பாதுகாப்பு, அவர்களின் முகாம்கள், ராணுவ தலைமையகங்கள், ராணுவ அணிவகுப்பு போன்றவற்றுக்கும் பாதிப்பு உருவாகலாம். காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளில், தற்போது ராணுவம் செயல்படவில்லை. ஆயுதப் படை சட்டம் அமலில் இருந்தால், நிலைமை மோசமாகும் போது, எந்த நேரத்திலும் ராணுவத்தை

வரவழைக்கலாம். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். ஆயுதப் படை சட்டத்தை எந்த வகையில் தளர்த்தினாலும், அது நாட்ன் நலனுக்கு நல்லதல்ல. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளாக, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் வன்முறை குறைந்திருந்தாலும், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் இன்னும் தொடர்கின்றன. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தரப்பில் தொடர்ந்து ஆதரவும், உதவியும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு ராணுவ தளபதி வி.கே.சிங் கூறினார்.

No comments:

Post a Comment