Monday, January 02, 2012இலங்கை::இலங்கையை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்று எந்த நாடும் எமக்கு உத்தரவிட முடியாது என அமைச்சரும், அரச பேச்சுக்குழுவின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.கூட்டமைப்பு மற்றும் அரசாசங்கத்திறிகிடையே இடம்பெறும் பேச்சுவார்த்தையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பற்றி அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, எந்த விடயங்கள் குறித்தும் பேசத் தயாராக இல்லை, பேசமாட்டோம் என்று மறுக்கவில்லை. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் குறித்து மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றிக் கூட நாங்கள் பேசமாட்டோம் என்று நிராகரிக்கவில்லை. இருந்தாலும் நாங்கள் பேச்சு நடத்துகிறோம். இவை மிகவும் நுணுக்கமான சிக்கலான விடயங்கள். இவற்றை ஓரிரு நாட்களில் தீர்த்துவிட முடியாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு சில பிரச்சினைகள் உள்ளன. அதுபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் பேசித் தான் தீர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13வது திருத்தப்படி, அதிகாரங்களை முழுமையாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு பகிர தயாராக இருப்பதாக தமக்கு உறுதியளித்துள்ளதாக இந்திய அரசு அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக, இந்தியா எமக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை. இலங்கையை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்று இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ எமக்கு உத்தரவிட முடியாது என குறிப்பிட்டுள்ளார். அவர்களின் விருப்பப்படி எம்மால் நடந்து கொள்ள முடியாது. இந்தப் பிரச்சினைகளை உள்ளுக்குள் தீர்ப்பதற்கே பேச்சுக்கள் நடக்கின்றன.
இந்திய அழுத்தம் என்று எதுவும் கிடையாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பிரதேசங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கூறுவது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்தே ஒருமனதான தீர்மானத்துக்கு வரமுடியும். எமக்கு ஒவ்வொரு கட்சியினதும் நிலைப்பாடு அவசியம். தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியமானது. அதேவேளை ஈ.பி.டி.பியினது கருத்தையும் அறிய வேண்டும். என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment