Thursday, January 12, 2012

பசுபதிபாண்டியன் படுகொலை சம்பவம் எதிரொலியாக தென் மாவட்டங்களில் பதற்றம்:ரயில் மீது குண்டுவீச்சு பஸ் போக்குவரத்து முடங்கியது!

Thursday, January 12, 2012
திண்டுக்கல்::பசுபதிபாண்டியன் படுகொலை சம்பவம் எதிரொலியாக, தென் மாவட்டங்களில் பதற்றம் காணப்படுகிறது. ரயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பஸ்கள் அடியோடு முடக்கப்பட்டன. தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன், திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். அன்றிரவு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பூசாரிபட்டி பிரிவு அருகே இரவு 11 மணிக்கு வத்தலகுண்டு நோக்கி சென்ற அரசு பஸ் மீது 20 பேர் கும்பல் கல்வீசி தாக்கியது. இதைத்தொடர்ந்து தென் மாவட்டங்களில் பல இடங்களிலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.

நேற்று பசுபதி பாண்டியனின் உடல், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து தூத்துக்குடிக்கு வேனில் கொண்டு செல்லப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் முருகம்பட்டியை கடந்த போது அரசு பஸ்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடிகள் நொறுங்கின. கண்டக்டர் ஒருவர் காயமடைந்தார். மதுரை புதூர் அருகே கும்பல் கல்வீசி யதில் 3 டவுன் பஸ்கள் சேதமடைந்தன. இரவு 10 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்து பெருமளவில் குறைக்கப்பட்டன. புறநகரில் ஊமச்சிகுளம், ரிங்ரோடு உள்ளிட்ட சில இடங்களில் 5 பஸ்கள் உடைக்கப்பட்டன.

விருதுநகர்:அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் நேற்று காலை பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டன. பதற்றம் காரணமாக அருப்புக்கோட்டையிலிருந்து பாலவநத்தம் வழியாக விருதுநகர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. தேனி: தேனி மாவட்டத்தில் தேவாரம், கண்டமனூர் பகுதிகளில் பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் ஒரு பயணி காயமடைந்தார்.

தேனியில் இருந்து வருசநாடு, கண்டமனூர் வழியாக செல்லக்கூடிய அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதேபோல, சின்னமனூர், தேவாரம் செல்லக்கூடிய பஸ்கள் போலீஸ் பாதுகாப்போடு இயக்கப்பட்டன. வெளியூர் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் சேர்த்தே அனுப்பப்பட்டன. சிவகங்கை: சிவகங்கையிலிருந்து வெளியூர் பஸ்கள் இயங்கவில்லை. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் அவதிப்பட்டனர்.

காரைக்குடியிலிருந்து ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, தேவகோட்டை வழித்தடங்களுக்கு பஸ்கள் இயக்கப் படவில்லை. இதனால் பயணிகள் பரிதவித்தனர். மானாமதுரை, திருப்புவனம், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை தொடர்ந்தது. ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நேற்று முன்தினம் இரவு மதுரை நோக்கி சென்ற தனியார் பஸ் மீது சிலர் கல்வீசி, கண்ணாடிகளை நொறுக்கினர். திருவெற்றியூரில் இருந்து திருவாடானை நோக்கி சென்ற அரசு பஸ் கல்வீச்சில் சேதமடைந்தது.
பரமக்குடி ஐந்துமுனை சாலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 அரசு டவுன் பஸ்கள், 2 தனியார் பஸ்கள், ஒரு லாரி கல்வீச்சில் சேதமடைந்தன. இதேபோல் கமுதியில் இருந்தும் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

நெல்லை, தூத்துக்குடியில் 10 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டன. பஸ் சேவை முடங்கியதால் பயணிகள் திடீரென சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
குமரியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதே போல் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வர வேண்டிய இரவு நேர பஸ்களும் வர வில்லை.

ரயில் மீது குண்டு வீச்சு: மதுரையிலிருந்து ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் நேற்றுமுன்தினம் இரவு 12.05 மணிக்கு கிளம்பியது. நள்ளிரவு 1.37 மணியளவில் பரமக்குடி ரயில் நிலையம் வந்தது. இந்த ரயிலின் கடைசி பெட்டியில் பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசி தப்பிச்சென்றனர்.

இதில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. ஸ்டேஷனில் நின்ற ரயில் கார்டு பாண்டியன், பெண் பயணிகள் அலறினர். இதனையடுதது அடுத்தடுத்த பெட்டிகளில் இருந்த பயணிகள், ஸ்டேஷன் பணியாளர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். அரைமணி நேரம் தாமதத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

வாகனங்கள் மீது தாக்குதல் : பசுபதிபாண்டி யன் உடல் கொண்டு வரப்பட்ட வாகனத்துடன் வந்த அவரது ஆதரவாளர்கள் வழிநெடுகிலும் வந்த லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் மீதும், ஆங்காங்கே திறந்திருந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். அரசு பஸ்கள் இயக்கப்படாததால் தென் மாவட்ட பகுதிகளில் தனியார் பஸ்கள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. புறநகர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

பரோலில் வந்த பசுபதி பாண்டியன் தம்பி

பசுபதிபாண்டியனின் தம்பி தாமோதரன் 2 வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பசுபதிபாண்டியன் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக தாமோதரன் சார்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் பரோலில் விடுமுறை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி அவருக்கு ஒரு நாள் பரோலில் செல்ல அனுமதி அளித்தார். இதையடுத்து தாமோதரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு பசுபதி பாண்டியன் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

} மதுரை, நெல்லை, தூத்துக்குடி என்று தென் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
} பசுபதி பாண்டியன் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட வழிகளில் எல்லாம் பஸ்கள் உடைக்கப்பட்டன.
} அடக்கம் செய்தபோதும், தூத்துக்குடியில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. தீவைப்பு சம்பவங்களும் நடந்தன.

பழிக்குப் பழி: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?-பரபரப்பு தகவல்கள்!

தூத்துக்குடி: பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசுபதி பாண்டியனுக்கும் மூலக்கரை பண்ணையார் குடும்பத்தினருக்கும் பழிக்கு பழியாக நடந்த மோதல்களில் பலர் உயிர் இழந்துள்ளனர். அந்த முன்விரோதமே இப்போது பசுபதி பண்டியனின் மரணத்திற்கும் காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறு.

கொலை வழக்கில் பிரபலம்

தூத்துக்குடி மேலஅலங்காரதட்டையைச் சேர்ந்த சிதம்பரம் மகன் பசுபதி பாண்டியன். 1990ம் ஆண்டில் அந்த பகுதியில் இரு பிரினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக 31-8-90ல் சிலுவைபட்டி மிக்கெல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதன் முதலாக பசுபதி பாண்டியன் சேர்க்கப்பட்டார்.

25-12-90ல் தூத்துக்குடி அருகே கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்ற வாலிபர் கொலை வழக்கிலும் பசுபதி பாண்டியன் பெயர் சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களிடையே பசுபதி பாண்டியன் பெயர் பிரபலமானது.

மூன்று முறை குண்டர்சட்டம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பசுபதி பாண்டியன் மீது 18 வழக்குகள் பதிவாகின. இதில் 9 கொலை வழக்குகள் ஆகும். பசுபதி பாண்டியன் கடந்த 97ம் ஆண்டு தூத்துக்குடி பின்னிங் மில் தொழிற்சங்க தலைவர் பால்ராஜை கொலை செய்த வழக்கிலும் தொடர்புடையவர். மேலும் 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் இவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மூலக்கரை பண்ணையார்

1990 களில் பழைய காயல் அருகே புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களும், மூலக்கரை பண்ணையார் சிவசுப்பிரமணிய நாடார் என்பவருக்கும் உப்பளத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு நடந்து வந்தது. இதில் பசுபதிபாண்டியனின் புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.

மேலும் பசுபதி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் 24-1-93ல் சிவசுப்பிரமணிய நாடார் மகன் அசுபதி பண்ணையாரை கொலை செய்தனர். இவர் சுபாஷ் பண்ணையாரின் தந்தையும், வெங்கடேஷ பண்ணையாரின் சித்தாப்பாவும் ஆவார்.

பலமுறை உயிர்தப்பியவர்

இதற்கு பழி வாங்கும் நோக்கில் 21-4-93ல் தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரத்தில் பசுபதி பாண்டியனை கொலை செய்ய முயற்சி நடந்தது.

இதில் அவரது நண்பர் பொன்இசக்கி பலியானார். படுகாயங்களுடன் பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார். 8-7-93ல் சிவசுப்பிரமணிய நாடாரை பசுபதிபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர். மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே அடுத்தடுத்து மோதல்கள் நடந்தன. இதில் இரு தரப்பிலும் பலர் உயிர் இழந்தனர்.

கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மனைவியுடன் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்த போது, எப்போதும் வென்றான் அருகே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டதில் ஜெசிந்தா பாண்டியன் இறந்தார். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப்பின்னர் பழிக்குப் பழியாக பசுபதி பாண்டியன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது பசுபதி பாண்டியனைக் கொன்றது பண்ணையார் ஆதரவாளர்களா அல்லது வேறு குரூப்பா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

பசுபதி பாண்டியன் கொலை கொலையாளிகளை பிடிக்க நெல்லை, தூத்துக்குடிக்கு தனிப்படைகள் விரைவு!

திண்டுக்கல் : தூத்துக்குடி மாவட்டம் அலங்காரதட்டு கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி பாண்டியன்(52). தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவராக இருந்தார். இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதனால் இவரை கொலை செய்ய எதிரிகள் பலமுறை முயற்சிகள் மேற்கொண்டனர். ஒரு முறை இவரை குறிவைத்து குண்டு வீசப்பட்டபோது உயிர் தப்பினார். இதில் அவரது மனைவி ஜெசிந்தா கொல்லப்பட்டார்.

இதற்கிடையே, பசுபதிபாண்டியன் 12 ஆண்டுக்கு முன் திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி இபி காலனிக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது தாய் மற்றும் மகள், மகனுடன் வசித்து வந்தார். தனக்கு நெருக்கமான 10க்கும் மேற்பட்டோரை பாதுகாப்புக்காக எப்போதும் உடன் வைத்திருந்தார். இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன் இவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு பாதுகாப்புக்கு இருந்தவர்கள் அனைவரும் சாப்பிடச் சென்றனர்.

தனியாக இருந்த பசுபதி பாண்டியனை திடீரென வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. தகவலறிந்த திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இக்கொலையால் தென்மாவட்டங்களில் பெரும் பதற்றம் நிலவியதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் உடனடியாக கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் மீது கல்வீசியதால் இந்த 2 மாவட்டங்களிலும் உடனடியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் தெய்வம், அசோகன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் 2 தனிப்படையினர், தூத்துக்குடி, நெல்லைக்கு விரைந்துள்ளன. 3வது தனிப்படை திண்டுக்கல்லில் கொலையாளிகளை தேடி வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பசுபதி பாண்டியன் உடல், நேற்று காலை 8 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது தாய் வேலம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை முன் எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மருத்துவமனை முன் ஏராளமானோர் திரண்டிருந்ததால் பின்புறம் வழியாக அவரது உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது.

தகவலறிந்த பலர் மருத்துவமனையின் பின்புறம் ஓடிச்சென்று ஆம்புலன்சை முற்றுகையிட்டனர். பின்னர் தாங்கள் ஊர்வலமாக உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி உடலை ஒப்படைக்க கோரினர். ஆனால் எஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் உடல் மெயின் வீதி வழியாக, சிறிது தூரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

பிற்பகல் 12.30 மணிக்கு மேல் அவரது உடல் திண்டுக்கல் நகர எல்லையை கடந்து மதுரை பைபாஸ் சாலையை சென்றடைந்தது. உடல் ஏற்றப்பட்ட ஆம்புலன்சின் முன்னும், பின்னும் 8 வாகனங்களில் அதிரடிப்படை மற்றும் போலீசார் உடன் சென்றனர். உடல் எடுத்து செல்லப்பட்டதால் திண்டுக்கல், திருப்பூர், கோவை, கொடைக்கானல், கம்பம், தேனி வழித்தடங்களில் மதுரையில் இருந்து நேற்று மதியம் 12 மணி வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. திண்டுக்கல்லில் பஸ்கள் இயங்காததால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. பஸ் போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

டிரைவர் மீது தாக்கு:

திண்டுக்கல் மாவட்டம் முருகன்பட்டி பகுதியில் திண்டுக¢கல்& மதுரை 4 வழிச்சாலையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலக்கோட்டை அருகே பூசாரிபட்டி பிரிவு வத்தலக்குண்டு நோக்கி சென்ற அரசு பஸ் மீது 20 பேர் கும்பல் கல்வீசி தாக்கியது. பஸ்சில் ஏறி கண்டக்டரின் கைப்பையை பறித்து சென்றது. அதில் ரூ.11,000 இருந்தது.

இந்த சம்பவத்தில் டிரைவர் சோலைராஜ் காயமடைந்தார். அப்போது ரோந்து சென்ற டிஎஸ்பி புஷ்பம் தலைமையிலான போலீசார் அக்கும்பலை விரட்டிச் சென்றனர். இதில் பூசாரிபட்டியை சேர்ந்த முருகன்(45), கணேசன்(45) ஆகியோர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார், 18 பேரை தேடி வருகின்றனர்.

செல்போன் துப்பு: பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட நேரத்தில், அவரது வீட்டின் அருகே இருந்து மர்மநபர் ஒருவர் செல்போனில் பேசியுள்ளார். போலீசார் செய்து அந்த செல்போன் எண்ணை கண்டுபிடித்தனர். அந்த எண்ணுக்குரியவர், பசுபதி பாண்டியனுக்கு, நன்கு பழக்கமானவர், எப்போதும் பாதுகாப்பாக இருப்பவர் என தெரியவந்துள்ளது. அந்த எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே, பசுபதிபாண்டியனுடன் வழக்கமாக பாதுகாப்பாக இருக்கும் 20 பேரை, திண்டுக்கல் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். காவல்நிலையத்தின் அனைத்து கதவுகளையும் பூட்டிக் கொண்டு விடிய, விடிய விசாரணை நடந்தது. இதில், அந்த செல் எண்ணுக்குரியவர் திருப்பூரில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தனிப்படைகளில் ஒன்று, நேற்று மாலை திருப்பூருக்கு விரைந்துள்ளது.

மகள், மகன் கதறல்

2006ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே காரில் மனைவியுடன் சென்ற பசுபதி பாண்டியனை லாரியை மோதி வெடிகுண்டு வீசி கொலை செய்ய ஒரு தரப்பினர் முயன்றனர். அதில் பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார். ஆனால், அவரது மனைவி ஜெசிந்தா கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் பசுபதி பாண்டியனும் கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை பார்த்து அவரது மகள் பிரியங்கா, மகன் இருவரும், ‘நாங்கள் அனாதையாகி விட்டோம்‘ எனக்கூறி கதறி அழுதனர்.

எஸ்பி பரபரப்பு தகவல் கொலை வழக்கில் துப்பு துலங்கியது

திண்டுக்கல் : பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரென்பது ஓரளவு தெரியவந்துள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்படுகின்றன என்று திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரன் தெரிவித்தார். பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளில் ஒருவர் சைக்கிளில் வந்ததாகவும் மற்ற 2 பேர் நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கொலை நடப்பதற்கு முன் மர்ம நபர் ஒருவர் அப்பகுதியில் நீண்ட நேரம் நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பசுபதி பாண்டியன் வீட்டின் அருகே அனாதையாக கிடந்த புதிய சைக்கிளை போலீசார் கைப்பற்றினர். அந்த சைக்கிளில் உமா சைக்கிள் மார்ட், பெரியார் சிலை அருகில், திண்டுக்கல் என்ற முகவரி இருந்தது. இதனால், பசுபதிபாண்டியனை கொலை செய்ய வந்தவர்கள் திண்டுக்கல்லில் சைக்கிளை வாடகைக்கு எடுத்துள்ளனர். எனவே கொலையில் ஈடுபட்டது உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து சைக்கிள் கடை உரிமையாளரிடம் பெறப்பட்ட அங்க அடையாளங்களை வைத்து குற்றவாளிகளின் படத்தை வரையும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கொலை நடப்பதற்கு முன் அப்பகுதியில் செல்போனில் பேசிய நபர்களை கண்டுபிடிக்க செல்போன் டவரில் குறிப்பட்ட நேரத்தில் பதிவாகியுள்ள எண்களைக் கொண்டு கொலையாளிகளை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் எஸ்பி ஜெயச்சந்திரன் கூறுகையில், ‘பசுபதி பாண்டியன் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 3 தனிப்படையினரும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். குற்றவாளிகள் யாரென்பது ஓரளவு தெரியவந்துள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்படுகின்றன. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்‘ என்றார்.

ஜான்பாண்டியன் இரங்கல்:

பசுபதிபாண்டியன் படுகொலை செய்யப்பட்டது அறிந்து துயரம் அடைந்தேன். இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக பாடுபடும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாததை வெளிப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யவேண்டும். பசுபதிபாண்டியன் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய தலித் தலைவர் பசுபதி பாண்டியன்!

தூத்துக்குடி: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரான பசுபதி பாண்டியன் தனது வாழ்நாள் முழுவதும் கொலை அச்சுறுத்தலிலேயே வாழ்ந்து வந்தவர். காரணம், 16 வயதிலேயே அவர் கொலை வழக்கில் சிக்கியவர் என்பதால்.

50 வயதான பசுபதி பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் அலங்கார திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் இவருக்குப் படிப்பு ஏறவில்லை. இதனால் 11வது வகுப்பு வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. அதன் பிறகு அவர் வன்முறைப் பாதைக்கு மாறினார். முதன் முதலில் இவர் கொலை வழக்கில் சிக்கினார். அப்போது இவருக்கு வயது 16தான்.

ஆரம்பத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மோதலில் ஈடுபட்ட பசுபதி பாண்டியன் பின்னர் சமூக விரோதி என்று பெயரெடுக்கும் அளவுக்கு மாறினார்.

அதன்பிறகு கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து, தாக்குதல் என ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கினார். அவர் மீது எட்டு கொலை வழக்குகள் சுமத்தப்பட்டன. அதில் முக்கியமானதுதான மூ்லக்கடை பண்ணையார் கொலை வழக்கு. இந்தக் கொலைக்குப் பிறகுதான் பசுபதி பாண்டியன தென் மாவட்டங்களில் பிரபலமானார்.

இந்தக் கொலைக்குப் பிறகு பசுபதி பாண்டியன் பெரும் பிரபலமடைந்ததைப் போல அவருக்கு எதிரிகளும் அதிகரித்து விட்டனர். இதனால் ஆங்காங்கு பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், அவரது எதிரிகளுக்கும் ரத்தக்களறிச் சண்டை நடந்தபடி இருந்தது. பசுபதி பாண்டியனைக் குறி வைத்து பலமுறை கொலை முயற்சிகள் நடந்துள்ளன. அத்தனையிலும் அவர் தப்பினார். இந்த மோதல்களில் தாமோதரன், கண்ணன், பீர் முகம்மது என பலரும் உயிரிழந்தனர்.

இப்படியாக போய்க் கொண்டிருந்த பசுபதி பாண்டியன், பின்னர் பாமகவில் திடீரென சேர்ந்தார். தென் மாவட்டங்களில் காலூன்ற அடிப்படையே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பாமகவுக்கு பசுபதி பாண்டியன் வந்தது பெரிய விஷயமாக அமைந்தது. ஆனாலும் சேர்ந்த வேகத்திலேயே அதிலிருந்து விலகினார் பசுபதி. அதன் பிறகு தேவேந்திர குல இளைஞர் பேரவையைத் தொடங்கினார்.

இந்த சமயத்தில்தான் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெசிந்தாவை மணம் புரிந்தார் பசுபதி பாண்டியன். தனது கணவர் பல்வேறு வழக்குகளில் சிக்கும்போதெல்லாம் அவரை மீட்பதே ஜெசிந்தாவுக்கு வேலையாகப் போனது. இறுதியில் 2006ம் ஆண்டு அவரும் கொடூரமாக கொல்லப்பட்டார். அந்த தாக்குதல் உண்மையில் பசுபதி பாண்டியனுக்கு வைக்கப்பட்ட குறியாகும். ஆனால் அவர் தப்பி விட்டார், ஜெசிந்தா பலியானார்.

நேற்று படுகொலையாவதற்கு முன்பு நான்கு முறை கொலை முயற்சியிலிருந்து தப்பியுள்ளார் பாண்டியன். தூத்துக்குடி மார்க்கெட்டில் வைத்து இவரை ஒருமுறை வெட்டினர். அப்போது அவர் தப்பி விட்டார். நெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருமுறை தப்பினார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக ஜாங்கிட் இருந்தபோது பசுபதி பாண்டியனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இனி்மேல் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்று அவர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நெல்லைக்கு இடம் பெயர்ந்தார் பசுபதி பாண்டியன். அதன் பிறகு திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தார். தற்போது அங்கேயே தனது மரணத்தையும் சந்தித்துள்ளார்.

கொலை மிரட்டல்களும், எதிரிகளும் அதிகமாக இருந்து வந்த காரணத்தால் முன்பு போல ஆர்ப்பாட்டமாக சுற்றாமல் அமைதியாகவும், ரகசியமாகவும் செயல்பட்டு வந்தார் பசுபதி பாண்டியன். இருப்பினும் எதிரிகள் நேற்று பசுபதி பாண்டியனை கொடூரமாக கொலை செய்து விட்டனர்.

No comments:

Post a Comment