Thursday, January 12, 2012

இலங்கை அதிபர் உறவினரை தாக்கிய மேலும் 4 பேர் கைது!

Thursday, January 12, 2012
ராமேஸ்வரம்::ராமேஸ்வரத்தில், இலங்கை அதிபர் ராஜபக்ஷே சகோதரியின் கணவர் திருக்குமரன் நடேசன் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, நேற்று ராமேஸ்வரத்திலிருந்து, 70க்கும் குறைவான படகுகளே, மீன் பிடிக்கச் சென்றன. இந்த தாக்குதல் தொடர்பாக, மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே சகோதரி நிருபமாவின் கணவர் திருக்குமரன் நடேசன், நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்தார். இங்குள்ள புரோகிதர் வீட்டில் இருந்த அவரைத் தாக்கிய ம.தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவ இடத்தை, ராமநாதபுரம் எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமார் பார்வையிட்டார். பின், புரோகிதர் அனந்தபாலு தீட்சித்திடம் விசாரித்தார்.

தாக்குதல் தொடர்பாக, ராமேஸ்வரம் காளவாய் தெருவைச் சேர்ந்த, நாம் தமிழர் இயக்கம் நம்புகுமார், ம.தி.மு.க.,வைச் சேர்ந்த காந்தி நகர் நம்புராஜன், காமராஜர் நகர் பன்னீர் செல்வம், ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த காளீஸ்வரன் ஆகிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்; தலைமறைவான பலரை தேடி வருகின்றனர்.

ராமேஸ்வரத்திலிருந்து, 700க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்வது வழக்கம். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, 70க்கும் குறைவான படகுகளே கடலுக்குச் சென்றன. இந்திய கடல் பகுதியை ஒட்டியே மீன் பிடித்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: உலக கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றதற்கே, ராமேஸ்வரம் மீனவர்களை கடலில் தள்ளி பலி கொடுத்த இலங்கை கடற்படையினர், இலங்கை அதிபரின் உறவினர் தாக்கப்பட்ட சம்பவத்தால், எந்த நடவடிக்கையும் எடுக்கலாம். நிலைமை சீராகும் வரை கடலுக்கு செல்வது பாதுகாப்பற்றது என்பதால், மீன் பிடிக்கச் செல்லவில்லை. இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment