Monday, January 02, 2012சிட்னி:இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டிக்காக, இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிரமாகப் பயிற்சி செய்தனர். இந்நிலையில், சச்சின் தனது 100வது சதத்தை ஆஸ்திரேலியா மண்ணில் அடிப்பதை நாங்கள் விரும்பவில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று, ஆஸ்திரேலிய பிரதமர் இந்திய வீரர்களுக்கு சிறப்பு விருந்து அளித்தார். அப்போது பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் சச்சின் தனது 100வது சதத்தை ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு செய்வார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளார்.
இதே விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், 'சச்சினின் தனது 100வது சதத்தை விரைவில் நிறைவு செய்வார் என, நான் உட்பட உலகமே எதிர்பார்க்கிறது. ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் சச்சின் 100வது சதத்தை அடிக்க நாங்கள் விரும்பவில்லை, அப்படி அடிக்க வேண்டுமென்றால் ஆஸ்திரேலியா தொடர் முடிந்ததும் சச்சின் அடிக்கட்டும்' என்று கூறினார்.
ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்ல இயான்சேப்பல் ஆலோசனை!
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி தொடரை 4 - 0 என வெல்வதற்கு மாஜி வீரர் இயான்சேப்பல் ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது போல் ஆஸி. அணியும் தோற்கடிக்க வேண்டுமானால் சேவாக், சச்சினை விரைவிலேயே அவுட்டாக்க வேண்டும். சேவாக்கை வெளியேற்றிவிட்டால் இந்திய அணியின் 50 சதவீத ரன்குவிப்பை கட்டுப்படுத்தி விடலாம். சேவாக் ஆப் ஸ்டெம்புகளுக்கு வெளியே செல்லும் பந்துகளை அடித்து ஆடுவார். அவரது கால் அசைவுகளுக்கு தகுந்தபடி பந்துவீசுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிட்னி மைதானத்தில் இதுவரை சச்சினை யாரும் கட்டுப்படுத்தியது இல்லை. அவருக்கு அந்த மைதானம் ராசியாக உள்ளது. அவரை கட்டுப்படுத்துவதற்கான வழியை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். காம்பீர் ஆப்சைடு பவுன்ஸ் பந்தில் நன்கு திணறுகிறார். இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
எழுச்சியுடன் செயல்படுவோம் : தோனி!
இதனையடுத்து, தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அணி 2வது டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என இந்திய அணியின் கேப்டன் மகேரந்திர சிங் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமரின் விருந்து நிகழச்சியில் பேசிய அவர், 'முதல் டெஸ்ட்டில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டதாகவும் எனினும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணி எழுச்சியுடன் விளையாடும்' எனக் கூறினார். மேலும் சச்சின் தனது 100வது சதத்தை நிறைவு செய்ய தொடர்ந்து நெக்கடி ஏற்பட்டு வருவதாகவும், ஆனால் அவர் நிச்சியம் அடுத்த வரும் டெஸ்ட் போட்டியில் நிறைவு செய்து பலரது வீண் கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என தோனி கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் படுதோல்வி அடைந்த இந்திய அணி தொடர்ச்சியாக அந்நிய மண்ணில் 5 டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த தொடர் தோல்விக்கும், சர்ச்சை ஏற்படுத்தி வரும் கருத்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமா என அடுத்த நடக்கவிருக்கும் சிட்னி டெஸ்ட்டில் தெரியவரும்...
No comments:
Post a Comment