Monday, December 05, 2011சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக ஞானதேசிகன் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சத்தியமூர்த்தி பவன் வந்தார். சிறிது இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக சைதாப்பேட்டையில் இன்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நான், காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் கலந்து கொள்கிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைந்து தொடங்க வேண்டும்.
தமிழக அரசு அணுமின் நிலையத்துக்கு வழங்கிய போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றது தவறு. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பை கேட்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் தமிழக போலீசாரின் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கிவிட்டால் மின்வெட்டு ஏற்படாது. மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படவிடாமல் தடுக்கும் சக்திகள் யாரால் தூண்டிவிடப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது தேசவிரோத சக்திகள் என்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை மத்திய அரசு விரைவில் கண்டு பிடிக்கும் என்று நம்புகிறேன். முல்லை பெரியாறு விஷயத்தில் கேரள காங்கிரசும், தமிழக காங்கிரசும் மாறுபட்டு இருப்பது இயற்கை தான். கேரளாவுக்கு எது தேவை என்று நினைக்கிறார்களோ அதற்காக கேரள காங்கிரஸ் போராடுவதும், தமிழ் நாட்டுக்கு எது தேவை என்று நினைக்கிறார்களோ அதற்காக தமிழக காங்கிரசர் போராடுவதும் தவறில்லை.
ஆனால் கேரள இளைஞர் காங்கிரசார் வன்முறையில் ஈடுபட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் இரு மாநில மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் மத்திய அரசோடு இணைந்து சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உடன் இருந்தார்.
No comments:
Post a Comment