Wednesday,December,28,2011டோக்கியோ: மிக நீண்ட காலத்திற்குப் பின், ஜப்பானில் உள்ள ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு, அந்நாடு அனுமதியளித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், அழிவில் இருந்து ஜப்பான் தொழில் உலகம் மீண்டு வர, ஆண்டுகள் பல ஆயின. 1967ல், வெளிநாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அமெரிக்கா, ரஷ்யா பனிப் போர் உச்சத்தில் இருந்தபோது, ஜப்பானின் அப்போதைய பிரதமர் எய்சக்கு சட்டோ, சர்வதேச பிரச்னைகளில் நேரடியாகத் தலையிடும் கம்யூனிஸ்ட் நாடுகள் அல்லது அமெரிக்காவால் ஆயுத ஏற்றுமதி தடை விதிக்கப்பட்ட நாடுகளுக்கு, ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப் போவதில்லை எனத் தடை விதித்தது. கடந்த 1976ல், அனைத்து நாடுகளுக்குமான ஆயுத ஏற்றுமதி, முழுவதுமாக தடை செய்யப்பட்டது. அமெரிக்காவுடன் மட்டும், சில தொழில்நுட்ப ரீதியிலான பரிமாற்றங்களை, ஜப்பான் மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், நேற்று ஜப்பான் அமைச்சரவை தலைமைச் செயலர் ஒசாமு புஜிமுரா வெளியிட்ட அறிக்கையில், "சர்வதேச பாதுகாப்பு நிலவரங்களில், சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டும், அமைதி மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காகவும், ஜப்பான், ஆயுத ஏற்றுமதியை அனுமதிக்க உள்ளது' என்று தெரிவித்தார். எனினும், கம்யூனிஸ்ட் நாடுகள், சர்வதேச பிரச்னைகளில் நேரடியாகத் தலையிடும் நாடுகள், ஐ.நா.,வால் ஆயுத வினியோகம் தடை செய்யப்பட்ட நாடுகள் ஆகியவற்றுக்கு, ஆயுத ஏற்றுமதி செய்யப்படாது என, ஜப்பான் உறுதியாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தடை நீக்கத்தால், ஜப்பானில் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வளம் பெறும். உள்நாட்டுப் பாதுகாப்புக்கான செலவு குறையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment