Wednesday,December,28,2011நாகை : நாகையை அடுத்த அக்கரைப்பேட்டையை சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் சின்னையன், அவரதுமகன் தங்கமணி உள்ளிட்ட 6 மீனவர்கள் சென்ற விசைப்படகில் பழுது ஏற்பட்டதால், இலங்கையில் கரை ஒதுங்கியது. இவர்களை இலங்கை அரசு கைது செய்தது. அவர்களை விடுவிக்காததைக் கண்டித்து, அக்கரைப்பேட்டையை சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் 6 மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து நேற்று மீனவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், வங்கக்கடலில் சென்னைக்கு 900 கி.மீ. தென்கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் நேற்று முன்தினம் இரவு முதல் கடல் அலைகளின் சீற்றம் கடுமையாக உள்ளது. இதனால் அக்கரைப்பேட்டை, கீச்சாம்குப்பம், கல்லார், நம்பியார் நகர், சாமந்தான்பேட்டை, நாகூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகுகள் தூக்கி வீசப்பட்டன. புயலால் துறைமுக அலுவலகத்தில் நேற்று 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இதனால் நேற்று மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் 5,000 விசைப்படகு மீனவர்களும், 3,000 பைபர் படகு மீனவர்கள் உள்பட 50,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காரைக்காலில் கடல் நேற்று முன்தினம் மாலை முதல் சீற்றத்துடன் காணப்பட்டது. 15 அடி முதல் 20 அடி வரை ராட்சத அலைகள் எழும்பியது. இதனால், நேற்று முன்தினம் மாலை காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 4,000 விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நேற்றும் கடல் சீற்றம் தொடர்ந்ததால் மீனவர்கள் 2வது நாளாக முடங்கினர்.
ராமேஸ்வரத்தில் புயல்: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் அபாயத்தை தொடர்ந்து ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் துறைமுகத்தில் நேற்று 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க ராமேஸ்வரம், மண் டபம், பாம்பன் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மண்டபம், பாம்பன் மீனவர்கள், மன்னார் வளைகுடா கடலில் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மீன்துறை எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் போதிய மீன்கள் கிடைக்காமல் நேற்று கரை திரும்பின.
சுனாமி அச்சம்
நாகை கல்லார் கிராமத்தில் மெயின் ரோடு வரை கடல் நீர் புகுந்தது. பூம்புகார், வானகிரி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கடல் சீற்றம் அதிகமாகி சுமார் 50 மீட்டர் முதல் 100 மீட்டர் வரை ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், ஊருக்குள் இருந்த மக்கள் வெளியேறி அருகிலிருந்த சமுதாய கூடத்தில் தஞ்சமடைந்தனர். மேலும் பூம்புகார் முகத்துவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இதனால் மீண்டும் சுனாமி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் விழித்தபடி இருந்தனர். நள்ளிரவு 2 மணிக்கு மேல் கடல் நீர் வெளியேறி சகஜநிலை திரும்பியது.
புதுவை, கடலூரில் கடல் கொந்தளிப்பு ஊருக்குள் நீர் புகுந்தது வீடுகள் இடிந்து தரைமட்டம்!

புதுச்சேரி : கடலூர், புதுவையில் கடல் கொந்தளிப்பு காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்தது. இதனால் விடிய, விடிய தூங்காமல் மீனவர்கள் விழித்திருந்தனர். சென்னைக்கு அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால் கடல் வழக்கத்தை விட கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. புதுவை அடுத்த தமிழக பகுதியான சின்னமுதலியார்சாவடி மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சந்திரன், தம்பிகண்ணு, மூர்த்தி, பாலு, முத்துக்கண்ணு ஆகியோரது கூரை மற்றும் மாடி வீடுகள் இடிந்து தரைமட்டமானது. படகுகள், மீன் வலைகளும் சேதமடைந்தன.
இதனால் சந்திராயன் குப்பம், சின்னமுதலியார்சாவடி, காலாபட்டு மீனவர்கள், சுனாமி பீதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய விழித்திருந்தனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால், ஆரோவில் பீச்சில் நேற்று முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுனாமி நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.
இரவு 10 மணியளவில் ராட்சத அலைகள் கரையை தாண்டி குழந்தைகள் விளையாட்டு திடல் வரை பாய்ந்தன. கடலோரத்தில் உள்ள குடிசைகளுக்குள் கடல்நீர் புகுந்தது. கடலூர் முகத்துவாரம் பகுதியில் மீனவர்களின் 15 விசைப்படகுகள், கடல்நீர் உப்பனாற்றில் ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கடல் சீற்றத்தால் நேற்றிரவு கடலோர கிராம மக்கள் விடிய விடிய தூங்காமல் அச்சத்துடன் விழித்திருந்தனர்.
No comments:
Post a Comment