Saturday, December 24, 2011

இலங்கையில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை மீட்டு வர முடியாத நிலை:மீன்பிடித் தொழில் முடக்கம் எதிரொலி: வெறிச்சோடிய கடலோர கிராமங்கள்!

Saturday, December 24, 2011
புதுக்கோட்டை : கடல் கொந்தளிப்பு தொடர்வதால், இலங்கையில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை, மீட்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீன்பிடி தொழில் முடங்கியுள்ளதால், கடலோர கிராமங்கள் வெறிச்சோடியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, கடந்த 19ம் தேதி, மீன் பிடிப்பதற்காக, கடலுக்குள் சென்ற விசைப் படகுகள், கடல் கொந்தளிப்பு மற்றும் சூறைக் காற்றில் சிக்கி நிலைகுலைந்தன. இதில், இரண்டு விசைப் படகுகள் கடலுக்குள் மூழ்கின.

மூன்று விசைப் படகுகள், இலங்கை அருகில் உள்ள கோபுரத் தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் கரை ஒதுங்கின. இவற்றில் சென்ற, 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டு, இலங்கையில் தங்க வைத்துள்ளனர். இவர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளில், மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

கடந்த ஐந்து நாட்களாக, கடல் கொந்தளிப்பு தொடர்வதால், மீனவர்களை மீட்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே, மீனவர்களை அழைத்து வர முடியும் என்பதால், இவர்கள் புதுக்கோட்டை திரும்ப, மேலும் சில நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களுக்கு தேவையான உதவிகளை, இலங்கையில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் வழங்கி வருவதால், புதுக்கோட்டையில் உள்ள அவர்களது குடும்பத்தினர், நிம்மதி அடைந்துள்ளனர்.

கடல் கொந்தளிப்பு தொடர்வதால், அம்மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக நேற்றும், மீன்பிடி தொழில் முடங்கியுள்ளது. உயிருக்கு பயந்து கடலுக்குள் செல்வதை, விசைப் படகு மீனவர்கள் மட்டுமின்றி, நாட்டுப் படகு மீனவர்களும் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக, கடலோர கிராமங்கள் அனைத்தும் வெறிச்சோடியுள்ளன.

No comments:

Post a Comment