Monday, December 12, 2011சென்னை : முல்லை பெரியாறு அணை பிரச்னையில் மத்திய அரசின் கவனத்தை உடனடியாக ஈர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. சென்னை தாம்பரத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் திரண்டுள்ளனர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பிரச்னையில் மத்திய அரசின் கவனத்தை உடனடியாக ஈர்ப்பதற்காகவும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் 12-ம் தேதி உண்ணாவிரதம் நடத்துவது என திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று காலை தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் தொடங்கியது. தென்சென்னை, வடசென்னை மாவட்ட திமுக சார்பில் அண்ணா அறிவாலய வளாகத்தில் நடந்த உண்ணாவிரதத்தை பொதுச்செயலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார். அங்கு மாலை 5 மணிக்கு உண்ணாவிரதத்தை திமுக தலைவர் கருணாநிதி முடித்து வைத்து பேசுகிறார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதேபோல தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர்கள் மற்றும் முக்கிய நகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (14-ம் தேதி) மனித சங்கிலி போராட்டத்தையும் திமுக நடத்துகிறது. முல்லை பெரியாறு அணையால் பாசன வசதி பெறும் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. மதுரையில் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையிலும் தேனியில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் மனித சங்கிலி நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment