Monday, December 12, 2011லண்டன் : அமெரிக்கா பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருகிறது என்று பாக். பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறியுள்ளார். ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள பைசாய் என்ற இடத்தில் நேட்டோ படையின் விமானங்கள் கடந்த 26ம் தேதி குண்டு வீசி தாக்கின. இதில் பாக். ராணுவ வீரர்கள் 24 பேர் பலியாயினர். இதையடுத்து, பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேற பாக். அரசு 15 நாள் கெடு விதித்தது. கெடு முடிந்ததால் பலுசிஸ்தானில் உள்ள ஷாம்சி தளத்தில் இருந்து அமெரிக்க படை நேற்று வெளியேறியது. இது அமெரிக்கா பாக். உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பாக். பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று பேட்டியளித்தார். அவர் கூறுகையில், ‘‘அமெரிக்கா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நம்பிக்கை குறைந்திருக்கிறது. கணிசமான இடைவெளி விழுந்திருக்கிறது’’ என்றார். அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, ஷாம்சி தளம் பாகிஸ்தானின் முழு கட்டுப்பாட்டில் வந்திருப்பதை கிலானி அதிகாரபூர்வமாக அறிவித்தார். அனுமதியின்றி நுழையும் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டது. ‘‘பாக். வான் எல்லையை பயன்படுத்த கூடாது என்று அமெரிக்காவுக்கு நிரந்தர தடை விதிப்பதற்கான வாய்ப்பையும் மறுப்பதற்கு இல்லை’’ என்றும் பேட்டியின்போது கிலானி தெரிவித்தார்.
எல்லைக்குள் அத்துமீறி பறக்கும் அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்: பாகிஸ்தான் மிரட்டல்!
இஸ்லாமாபாத்::கடந்த மாதம் 26-ந்தேதி ஆப்கானிஸ்தான் எல்லையில் முகாமிட்டு இருந்த பாகிஸ்தான் ராணுவ முகாமின் மீது அமெரிக்க தலைமையிலான நேட்டோ போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. அதில் 24 வீரர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் “நேட்டோ” படைகளுக்கு லாரிகள் மூலம் பெட்ரோல் மற்றும் உணவு பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் ஷாம்சி விமான படை தளத்தில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.
இங்கிருந்து பறந்து சென்று அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணைகளை வீசி பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை அழித்து வந்தது. பாகிஸ்தானின் நடவடிக்கையை தொடர்ந்து தற்போது ஷாம்சி விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்க ராணுவம் முற்றிலும் வெளியேறியது. நேற்று கடைசி விமானம் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் ஏவுகணை வீச பயன்படுத்தப்படும் அதிநவீன கருவிகள் போன்றவற்றை எடுத்து சென்றது.
ஷாம்சி விமான தளம் தற்போது பாகிஸ்தான் ராணுவ வசம் உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு புதிய ராணுவ கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ மற்றும் அதன் நட்பு நாடு களின் படைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தால் அதிரடி தாக்குதல் நடத்தலாம். மேலும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பறக்கும் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மற்றும் நேட்டோ விமானங்களை சுட்டு வீழ்த்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவ அதிகாரி கூறும்போது, எங்கள் எல்லைக்குள் அத்து மீறி நுழையும் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மற்றும் நேட்டோ படைகளை எதிரிகளாக கருதி சுட்டு வீழ்த்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment