Thursday, December 8, 2011

குழந்தை திருமணத்தை நிறுத்திய மூன்று சிறுமிகளுக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ரொக்கப்பரிசு வழங்கினார்!

Thursday,December, 08, 2011
புதுடில்லி : குழந்தை திருமணத்திற்கு எதிராகப் போராடி, அவற்றை தடுத்து நிறுத்திய, மூன்று சிறுமிகளுக்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், நேற்று தலா 10,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கினார். மேற்கு வங்க மாநிலம், புரூலியாவை சேர்ந்தவர் சங்கீதா பவுரி,15. இவரின் பெற்றோர், இவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்றனர். அதை ஏற்காமல், பெற்றோர் மற்றும் சமூகத்திற்கு எதிராக, தைரியமாக போராடி திருமணத்தை தடுத்து நிறுத்தினார். இவரைப் போலவே, புரூலியாவை சேர்ந்த மற்ற இரு சிறுமிகளான பீனா காளிந்தியும், முக்தி மஜ்ஹியும் தங்களது திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

இவர்களின் தைரியத்தை அறிந்த, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மூன்று இளம் பெண்களையும், நேற்று, ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து, அவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு கொடுத்து பாராட்டி கவுரவித்தார்.

ஜனாதிபதி பிரதிபா கூறுகையில், "பள்ளிக்குச் செல்லும் மூன்று சிறுமிகளும், கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளனர். சமூக அநீதியான பால்ய விவாகத்தை எதிர்த்து போராடிய, மூன்று பேரையும் பாராட்டுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.

சங்கீதா பவுரி, அவரின் தந்தை பிபூதியுடன் வந்து ஜனாதிபதியைச் சந்தித்து, அவரிடம் இருந்து பரிசு வாங்கும் போது, மகிழ்ச்சியாகவும், பதட்டத்துடனும் காணப்பட்டார்.

சங்கீதா பவுரி கூறுகையில், "சிறிது காலத்திற்கு முன், எனக்கு திருமணம் செய்ய, எனது பெற்றோர் முயற்சி செய்தனர். கிராமத்தில் உள்ள பெரியவர்களும், இதற்கு உடந்தையாக இருந்தனர். இவர்கள் அனைவரையும் எதிர்த்துப் போராடி, திருமணத்தை தடுத்து நிறுத்தினேன். இந்த செய்தி கேட்டு, ஜனாதிபதி என்னை அழைத்து பாராட்டி கவுரவித்தார்' என்றார்.

No comments:

Post a Comment