Wednesday,December,28,2011இலங்கை::யாழ்ப்பாணத்தில் காணாமல்போனதாகக் கூறப்படும் மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்கள் குகன் என அழைக்கப்படும் கிட்ணன் முருகானந்தன் மற்று லலித் குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
குகன் என்பவரின் மனைவியும் லலித் குமாரின் தந்தையும் இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய, அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் மாஅதிபர் என்.கே. இலங்ககோன் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோர் மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
காணாமல்போன இருவரும் மக்கள் பேராட்ட இயக்கத்தின் செயற்பாட்டு உறுப்பினர்களாவரென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச மனி்த உரிமைகள் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளையும் இவர்கள் மிகுந்த பிரயத்தனத்துடன் மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 9ஆம் திகதியன்று இந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருவரும் யாழ். நகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பிடத்தை நோக்கிச் சென்றதாகவும், அதுமுதல் அவர்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் அறியக்கிடைக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்ததாக மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறும், காணாமல்போனதாக கூறப்படும் இரண்டு பேரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு இடைக்கால உத்தரவென்றைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment