Wednesday,December,28,2011சோர்வாட்: ரிலையன்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்த திருபாய் அம்பானியின் 80-வது பிறந்த நாள், அவரது சொந்த ஊரில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று சொந்த ஊருக்கு வந்த அம்பானியின் மகன்கள் முகேஷ் மற்றும் அனில் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். பாகப்பிரிவினை பிரச்னை காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக பிரிந்து கிடந்த சகோதரர்கள் குடும்பங்களை ஒன்று சேர்க்க அவர்களது அம்மா கோகிலா பென் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்திருப்பதாக ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
குஜராத் மாநிலம் ஜூனாகட் மாவட்டம் சோர்வாட் கிராமத்தில் பிறந்தவர் திருபாய் அம்பானி. மும்பையில் சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி, இந்தியாவின் நம்பர் 1 தொழில் அதிபராக உயர்ந்தவர். இவர், 2002-ம் ஆண்டு இறந்தார். சொத்துக்களை பிரிப்பதில் அம்பானியின் மகன்களான முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. 2005-ம் ஆண்டு அம்மா கோகிலா பென் தலையிட்டு சொத்துக்களை பிரித்துக் கொடுத்தார். ரிலையன்ஸ் குழுமத்தில் முகேஷ் அம்பானி நிர்வகித்து வந்த முக்கிய நிறுவனங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டது.
இதனால் பாகப்பிரிவினை ஏற்பட்டது முதல் சகோதரர்கள் இடையே உறவு முறிந்தது. அவர்களை சமாதானப்படுத்த கோகிலா பென் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், திருபாய் அம்பானியின் 80-வது பிறந்தநாளை அவரது சொந்த ஊரான சோர்வாட்டில் சிறப்பாக நடத்த கோகிலா பென் முடிவு செய்தார். சகோதரர்கள் இருவரும் அப்பாவின் பிறந்த நாள் விழாவில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கட்டளையிட்டார். இதை சகோதரர்கள் ஏற்றுக் கொண்டனர்.
நேற்று காலை 9.30 மணியளவில் அனில் அம்பானி தனது அம்மா, மனைவி டீனா மற்றும் இரண்டு மகன்களுடன் சோர்வுட்டில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டுக்கு வந்தார். பிற்பகல் ஒரு மணிக்கு முகேஷ் அம்பானி தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் ஹெலிகாப்டரில் வந்தார். அவரை அனில் அம்பானியும், கூடியிருந்த கிராம மக்களும் உற்சாக குரல் எழுப்பி வரவேற்றனர். சகோதரர்கள் இருவரும் ஒருவரை கட்டித் தழுவிக் கொண்டு வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். அம்பானி சகோதரர்கள் இருவரும் தாயின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்றனர்.
பூர்வீக வீட்டில் இன்று சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. சோர்வாட் மற்றும் அதை சுற்றியுள்ள 4 கிராம மக்களுக்கு பெரிய அளவில் விருந்து கொடுக்கப்பட்டது. கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அம்பானி குடும்பத்தினர் நாளை வரை சொந்த ஊரில் தங்கியிருப்பார்கள் என ரிலையன்ஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கடந்த 95-ம் ஆண்டு திருபாய் அம்பானி உயிருடன் இருந்தபோது அவரது பிறந்த நாள் விழா சொந்த ஊரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே சிறப்புடன் நடத்தப்பட்ட விழாவில் சகோதரர்கள் ஒன்று சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment