Monday, December 5, 2011

வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்களுடன் இணைந்து நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Monday, December 05, 2011
தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் நலன் சார்ந்த பயணத்தை அற்ப அரசியல் நோக்கங்களை கொண்டு நிறுத்தி விட முடியாது என்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.எனக்கு ஜனாதிபதி பதவியை விட செல்ல உச்ச இடம் வேறில்லை. அரசியலில் நன்கு பழக்கப்பட்ட நான் விமர்சனங்களைக் கண்டு ஒருபோதும் சலிப்படையமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க முடியாவிட்டால் அரசியல் செய்ய முடியாது. அதனால் விமர்சனங்களைச் சலிப்படையாது பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சில வெளிநாட்டுத் தலைவர்களுக்கு நடந்த கதி எனக்கும் நடக்கலாம் எனச் சிலர் எதிர்பார்க்கிறார்கள். அது வெறும் கனவே என்றும் ஜனாதிபதி கூறினார்.

அம்பலாங்கொடை, பட்டபொல சிறி சுபத்ராராம விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனுமதஸ்ஸி தேரர் நினைவான இருமாடி கட்டிடத்தைத் திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வின்போது புதிய நூலகத்தையும், நெனசல அறிவகத் தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், சிலர் நாட்டுக்கு நாடு சென்று நாட்டை விமர்சிக்கின்றார்கள். அவர்களது விமர்சனங்களை ஏற்க எமது மக்கள் தயாரில்லை. இவர்களின் செயற்பாடுகளைப் பார்த்து சில வெளிநாட்டுத் தலைவர்கள் சிரிக்கின்றார்கள்.

இதேநேரம் வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்களுடன் இணைந்து நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள். இவ்விடயத்தில் மக்கள் கவனம் செலுத்தியுள்ளார்கள். நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது.

எமது விடயங்களை வெளிநாடுகளுக்குச் சென்று கூற அவசரப்படாமல் அவற்றை முதலில் என்னிடம் கூறுவதே சிறந்தது. மக்கள் நலன் சார்ந்த வரவு- செலவுத் திட்டத்தை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன். அச்சமயம் எதிர்க் கட்சியினர் சபையிலிருந்து வெளியேறினர். ஆனால் நாம் அன்று எதிர்க் கட்சி வரிசையில் இருந்தபோது அன்றைய ஆளும் கட்சி முன்வைத்த வரவு- செலவுத் திட்டத்தை நல்லபடி செவிசாய்த்து வரவு- செலவுத் திட்ட விவாதத்தின் போது தான் எதிர்ப்புகளை தெரிவித்தோம்.

அரசாங்கம் தவறான வழியில் சென்றால் அதனை நல்வழிப்படுத்தும் பணியை மதத் தலைவர்கள் சிறந்த முறையில் மேற்கொண்டு வருகின்றவர்கள். பணம் இல்லை என்பதற்காகக் கிராம அபிவிருத்தியைத் தாமதப்படுத்த முடியாது. எமது அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழித்தல் உள்ளிட்ட பல சவால்களுக்கு முகம் கொடுத்தபடியே நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்தது என்றார். இந்நிகழ்வில் அமைச்சர் பியசேன கமகே, எம்.பி. சஜின் வாஸ் குணவர்தன, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment