Monday, December 5, 2011

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி விரைவில் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்-அமைச்ர் நியோமல் பெரேரா!

Monday, December 05, 2011
தமிழ்க் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அக்கட்சியின் சார்பிலான பிரதிநிதிகளின் பெயர்களை சபாநாயகருக்கு அறிவித்து, பேச்சு, தெரிவுக்குழு ஆகிய இரண்டு விடயங்களையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என்று பிரதி வெளிவிவகார அமைச்ர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் விபரிக்கையிலேயே பிரதியமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை அடைவதற்கு புதிய இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் என அரசை வலியுறுத்துகின்றோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதி வெளிவிவகார அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி விரைவில் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். எனவே அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து கலந்து கொள்ளுமாறு கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இதேவேளை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான அரசாங்கத்துடனான பேச்சுக்களில் தமிழ்க் கூட்டமைப்பினர் கலந்துகொள்கின்ற அதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமது பிரதிநிதிகளை பெயரிடலாம்.

கூட்டமைப்பினால் இந்த இரண்டு விடயங்களையும் சமாந்தரமாக முன்னெடுக்க முடியும். இடையில் ஏதாவது சிக்கல்கள் ஏற்படின் அது தொடர்பில் விடயங்களை முன்வைக்கலாம்.

எனவே கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசாங்கம் தயார் என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றோம். அதேநேரம் எம்முடன் பேச்சு நடத்திக்கொண்டே கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் இடம்பெறலாம் என்றார்.

No comments:

Post a Comment