Tuesday, December 27, 2011

ராமேஸ்வரத்தில் புயல் எச்சரிக்கை!

Tuesday, December,27, 2011
ராமேஸ்வரம் : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது. புயல் அபாயத்தை மீறி ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதியளிக்கவில்லை. 24ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் மண்டபம் மீனவர்கள் தொழிலுக்குச் சென்று வந்தனர். கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் வங்கக்கடலில் தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. மேலும் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று காலை ஏற்றப்பட்டுள்ளது.

புயல் அபாயத்தால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்க மீன்துறை அதிகாரிகள் மறுத்தனர். ஆனால், கடல் சீற்றம் குறைவாக உள்ளதாகக் கூறி டோக்கன் கேட்டு அதிகாரிகளுடன், மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களது சொந்த பொறுப்பில் செல்வதாக அளித்த உறுதிமொழியின் பேரில், 712 விசைப்படகுகளில் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இது குறித்து மீன்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment