Saturday, December 3, 2011

பொலிஸ் நிலையத்திற்குள் இராணுவ வீரர் தனது மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம்!

Saturday, December 03, 2011
திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்திற்குள் இராணுவ வீரர் ஒருவர் தமது மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

திருமணம் தொடர்பில் இரண்டு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்கொன்றை தீர்த்து வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

19 வயது பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட 26 வயது இராணுவ வீரரே இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளார்.

இருவருக்கும் இடையே நடைபெற்ற திருமணத்திற்கு பெண் வீட்டார் வெளியிட்ட எதிர்ப்பு தொடர்பில் கிடைத்திருந்த முறைப்பாடொன்றை விசாரிப்பதற்காக இரண்டு தரப்பினரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முன்னிலையில் விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், குறித்த இராணுவ வீரர் தாம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினால் பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் பின்னர் கைக்குண்டொன்றை வீசியதாகவும் பொலிஸ் ஊடாகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட இராணுவ வீரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிணக்குடன் தொடர்புடையவர்கள் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment