Saturday, December 03, 2011சென்னை: தமிழக கவர்னரை விஜயகாந்த் சந்தித்து மனு கொடுத்தார். தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட தென் மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட கேரளா முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதனால் இரு மாநிலங்கள் இடையே பிரச்சினை உருவாகி உள்ளது.
தே.மு.தி.க.வும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கவர்னரிடம் மனு கொடுக்க தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று காலை கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்றார். அவருடன் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட 28 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் காரில் சென்றனர்.
கவர்னர் மாளிகையில் விஜயகாந்த்தும், எம்.எல்.ஏ.க்களும் கவர்னர் ரோசய்யாவை 10.20 மணிக்கு சந்தித்து பெரியாறு அணை மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி மனு கொடுத்தனர். கவர்னரை சந்தித்தபின் 11 மணிக்கு விஜயகாந்த் வெளியே வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணை, தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி கவர்னரிடம் மனு கொடுத்தோம். சட்ட சபையில் நாங்கள் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார். இதில் அனைவரும் ஒட்டு மொத்தமாக செயல்பட்டு தடுக்க வேண்டும்.
கவர்னரிடம் கொடுத்த மனுவில் விஜயகாந்த் கூறியிருப்பதாவது:-
1979-ல் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி 132 அடிவரை மட்டுமே தண்ணீரை தேக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கேரள அரசு வேண்டுகோள் விடுத்தது. மத்திய நீர்வள கமிஷனின் வழிகாட்டுதலின் பேரில் தமிழக அரசு பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டது. அணை உறுதியாக இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்தது. மேலும் நீர்மட்டத்தை குறைக்க கூடாது. 156 அடி வரை தண்ணீரை தேக்க வேண்டும் என்று தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்க கேரளா மறுத்ததுடன் அணை பலவீனமாக இருப்பதாக பிரசாரம் செய்து வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் 142 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர்குழு அணையை பார்வையிட்டு அணை பலமாக இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் கேரள அரசு தவறான தகவல் பரப்பி வருகிறது.
புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபடுவதுடன் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புபடி 142 அடி உயர்த்தி தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் அவர்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதில் மத்திய அரசு தலையிட்டு இருநாடுகள் இடையேயான மீன்பிடி ஒப்பந்தத்தை முறையாக அமல்படுத்தி தமிழக மீனவர்கள் நலனை பாதுகாக்க வேண்டும்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய அரசு ரூ.1319 கோடி செலவில் 49 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுப்பதை வரவேற்கிறோம். அதேபோல் தமிழக மீனவர்கள் நலனை பாதுகாக்கவும் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment