Tuesday, December 6, 2011

மண்டியிட்டு மன்னிப்புக்கோரும் அளவுக்கு எனது கணவர் எவ்வித குற்றங்களையும் புரியவில்லை-அனோமா பொன்சேகா!

Tuesday, December 06, 2011
மண்டியிட்டு மன்னிப்புக்கோரும் அளவுக்கு எனது கணவர் எவ்வித குற்றங்களையும் புரியவில்லை. அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நீதியை நாம் நாடுகின்றோமே தவிர, மன்னிப்புக்கோரி மன்றாடவில்லை.''இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாரியாரான அனோமா பொன்சேகா.இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட்டிருந்தால் எனது கணவரின் விடுதலைக்காக நீதியைத் தேடி நாம் சர்வதேசத்துக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அனோமா பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

"சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து அவரது குடும்பம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தோன்றவேண்டுமே தவிர, சர்வதேசத்தை நாடிப் பயனில்லை'' என்று ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர கருத்துத் தெரிவித்திருந்தார்.

அலரி மாளிகைக்குச் செல்வதற்கு பொன்சேகாவின் குடும்பத்துக்கு அவ்வளவு செலவாகாது. எதிர்க்கட்சித் தலைவரின் பாணியையே அவர்களும் கையாள்கின்றனர் எனச் சுட்டிக்காட்டி "த இந்து' பத்திரிகைக்கு எழுத்து மூலம் வழங்கிய செவ்வியிலேயே ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பாக கேட்டபோதே முன்னாள் இராணுவத் தளபதியின் பாரியார் அனோமா பொன்சேகா மேற்கண்ட தகவலை வழங்கினார்.

இது தொடர்பாக அவர் கூறியவை வருமாறு:

எனது கணவரான ஜெனரல் பொன்சேகா எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை. குற்றம் இழைத்து தண்டனை அனுபவிக்கின்றவர்கள்தான் மன்னிப்பு கோரவேண்டும். அடிப்படையே இல்லாமல் கைதுசெய்யப்பட்டு தண்டனை அனுபவிக்கும் எனது கணவருக்கு நீதியே தேவைப்படுகின்றது.

எனது கணவரை எவ்வாறான வழிமுறைகளைக் கையாண்டு கைதுசெய்தனர் என்று உங்களுக்குத் தெரியும், இலங்கையில் நீதி கிடைக்கும் என்று நான் கருதவில்லை. ஆட்சிப்பீடத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் எமக்கு அதனையே உணர்த்துகின்றன.

எமது நாட்டில் நீதி கிடைத்திருந்தால் நாம் சர்வதேசத்தை நாடவேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்காது. எனது கணவரின் விடுதலை தொடர்பாக நாம் ஆரம்பம் முதலே மனித உரிமை அமைப்புகளுக்குத் தெரியப்படுத்தி வருகின்றோம். ஏதாவது ஒரு வழியில் நீதி கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன்.

No comments:

Post a Comment