Tuesday, December 06, 2011கூடலூர்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை இரு மாநிலங்களுக்கு இடையேயான மோதலாக உருவெடுத்துள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் கேரளக்காரர்கள்தான். தமிழக- கேரள எல்லையில் உள்ள குமுளியில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தமிழ்நாட்டில் இருந்து சென்ற அய்யப்ப பக்தர்களையும் ஓடஓட விரட்டி தாக்கினர்.
தமிழர்களின் கடைகளை குறிபார்த்து அடித்து நொறுக்கினர். இதற்கு பதிலடியாக தமிழ்நாட்டில் கூடலூர், கம்பம், கம்பம் மெட்டு ஆகிய பகுதிகளில் நேற்று வன்முறை சம்பவங்கள் நடந்தன. தமிழ்நாட்டில் இருந்து கூடலூர், கம்பம், கம்பம் மெட்டு ஆகிய பகுதிகள் வழியாக கேரளாவுக்கு சென்ற வாகனங்களை தமிழர்கள் தடுத்து நிறுத்தினர். அய்யப்ப பக்தர்கள் வாகனங்களையும் பாதுகாப்பு கருதி இந்த வழியாக செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
கேரளாவுக்கு பால், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை ஏற்றி சென்ற லாரிகளை செல்லவிடாமல் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதனால் கூடலூர், கம்பம் ஆகிய பகுதிகளில் சாலைகளின் இருபக்கங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இந்த சம்பவங்களை தொடர்ந்து கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் குமுளியில் நேற்று இரவு தமிழர்களின் கடைகளை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது. ஓட்டல்கள், டீக்கடைகள், பல்பொருள் அங்காடிகளை உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கினர்.
கடைகளில் இருந்த தமிழர்கள் உயிர் பிழைத்தால் போதும் வெளியே ஓடிவந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் துரத்தி துரத்தி அடித்தனர். 20-க்கும் மேற்பட்ட தமிழர்களின் கடைகள் சூறையாடப்பட்டன. குமுளியில் தமிழர்களும், அவர்களது கடைகளும் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும், கூடலூர், கம்பம்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள கேரள மாநிலத்தவர்களின் கடைகளை அடித்து நொறுக்கினர்.
கம்பம் மெயின்ரோட்டில் உள்ள 2 ஓட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல்பொருள் அங்காடியும் அடித்து நொறுக்கப்பட்டது. கம்பம் அருகே காமய கவுண்டன்பட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மினி லாரியில் திராட்சை பழங்கள் ஏற்றி செல்வதற்காக வந்தது. நள்ளிரவில் ஒரு கும்பல் அந்த லாரியை தீவைத்து எரித்தனர். இதில் லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது.
கம்பம் அருகே உள்ள நாராயணத் தேவன்பட்டியில் உள்ள கேரளாவை சேர்ந்தவரின் ஒரு திராட்சை தோட்டத்தை தீவைத்து எரித்தனர். அந்த தோட்டத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஜீப் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீ பிடித்து எரிந்தன. தோட்டத்தில் இருந்த ஜெனரேட்டரும் தீ பிடித்து வெடித்து சிதறியது. கம்பத்தில் நேற்று இரவு முழுவதும் பதட்டமாகவே இருந்தது. கேரள முதல்வருக்கு எதிராகவும், கேரளாவை கண்டித்தும் இளைஞர்கள் கோஷம் போட்டப்படி வீதிகளில் சென்றனர். அந்த வழியாக வந்த வாகனங்களை கேரளாவுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
நிலைமை மோசமானதை தொடர்ந்து கம்பம், கூடலூர், கம்பம் மெட்டு ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி, போடி மெட்டு, கம்பம் மெட்டு நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கேரளா செல்லும் அய்யப்ப பக்தர்கள் கூடலூர், கம்பம் வழியாக செல்லாமல் பழனி, பாலக்காடு வழியாக செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment