Sunday, December 25, 2011சென்னை : சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாளை கருப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அவரைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் அறிவித்திருப்பதால் சென்னை போலீஸார் படபடப்புடன் உள்ளனர். எந்த இடத்திலும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டு விடக் கூடாதே என்ற பதட்டத்துடன் அவர்கள் பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு மத்திய அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் வைகோ. மேலும், பிரதமருக்கு நாளை கருப்புக் கொடி காட்டப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதேபோல விஜயகாந்த்தும் தனது தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவித்துள்ளார். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார் என்றும் அவர் காட்டமாக கேட்டுள்ளார்.
இதேபோல, காரைக்குடிக்கு பிரதமர் வரும்போது அங்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று விவசாய அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் அறிவித்துள்ளன. மேலும், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் சென்னை, காரைக்குடி, திருச்சி போலீஸார் கடும் பதட்டத்துடன் உள்ளனர். எந்த இடத்திலும் கருப்புக் கொடி காட்டப்பட்டு விடக் கூடாதே என்ற படபடப்புடன் உள்ளனர். இதனால் பிரதமர் செல்லும் வழியெல்லாம் பெருமளவில் போலீஸார் குவிக்கப்படவுள்ளனர். பலத்த பாதுகாப்பும் போடப்படுகிறது.
சென்னை ராஜ்பவனிலிருந்து பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை ரகசிய கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்படுகின்றன. ஆயுதப் படை போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து ஏற்கனவே வந்து விட்ட 6 உறுப்பினர்களைக் கொண்ட பிரதமரின் பாதுகாப்பு்ப் படை நிபுணர்களும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்துள்ளனர்.
இதேபோல திருச்சி, காரைக்குடி ஆகிய இடங்களிலும் பெருமளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் காரைக்குடியில் ஆயிரக்கணக்கில் விவசாயிகளைத் திரட்டிக் கொண்டு வர பல்வேறு விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதால் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்...
முல்லைப் பெரியாறு போராட்டத்தால் பதற்றம் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வரலாறு காணாத பாதுகாப்பு!
காரைக்குடி: தமிழகம் வரும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் பிரதமர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நேற்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ‘பெரியாறு அணை வழக்கு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளதால் மத்திய அரசால் நேரடியாக தலையிட முடியாது. இரு மாநில முதல்வர்களும் ஒப்புக்கொண்டால் அழைத்து பேச்சு மட்டுமே நடத்த முடியும்‘ என்றார். ஆனால் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, கேரளாவுக்கு சாதகமாக பெரியாறு அணைக்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை மத்திய அரசு அமைத்தது மட்டும் சரியா என தமிழக விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் தமிழகம் வரும் பிரதமரை கண்டித்து வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றுவோம் என பெரியாறு பாசன விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தேமுதிகவும், காரைக்குடியில் மதிமுகவும் பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப்போவதாக அறிவித்துள்ளன. தவிர, பாமக, தமுமுக, வக்கீல் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கறுப்புக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளன. இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காரைக்குடியில் பிரதமர் செல்லும் 5 கி.மீ. வழிநெடுகிலும் போலீசார் நிறுத்தப்படுகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் குறித்த முழு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் பாதையின் இரு பக்கங்களிலும் தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது. மோப்பநாய் சகிதமாக அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. செக்போஸ்ட்களில் வாகன சோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. லாட்ஜ்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
தென் மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் குமுளி பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார். இதனால் போலீஸ் உயரதிகாரிகள் பலர் சென்னையிலிருந்து காரைக்குடி வரவழைக்கப்பட்டுள்ளனர். 6 கம்பெனி பட்டாலியன் உள்ளிட்ட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
விழா நடக்கும் அரங்கில் அனுமதிக்கப்படும் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
பிரதமருக்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டம், கறுப்புக்கொடி காட்டுதல் என யார் ஈடுபட்டாலும் அவர்களை புறப்படும் இடத்திலேயே உடனுக்குடன் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தேமுதிக, மதிமுக, தமுமுக பிரமுகர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர் களது செல்போன் உரையாடல்களை யும் மத்திய உளவுத்துறை பதிவு செய்து வருகிறது. அவசியம் இருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலரை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment