Wednesday, December 7, 2011

தமிழகத்தில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கேரள கடைகள் உடைப்பு:உடைப்பு: ஊழியர் காயம்-பதட்டம்!

Wednesday,December,07,2011
சென்னை: முல்லைப் பெரியாறு பிரச்சினையை கேரள அரசும், அந்த மாநில அரசியல் கட்சிகளும் பெரிதாக்கி வருகின்றன. இதன் காரணமாக கேரள எல்லையில் தமிழர்கள் மீதும், தமிழக வாகனங்கள் மீதும் கேரள ரவுடிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழக எல்லையில் பதட்டமான சூழ்நிலை உள்ளது.

கேரள வியாபாரிகளுக்கும் இங்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில், சென்னையிலும் கேரளாகாரருக்கு சொந்தமான கடைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது குட்டி என்பவருக்கு சொந்தமான பேக்கரி மற்றும் இனிப்பு கடை உள்ளது. இன்று காலை 11.15 மணி அளவில் 5 பேர் கொண்ட கும்பல் பேக்கரி மற்றும் இனிப்பு கடை மீது தாக்குதல் நடத்தியது. அப்போது கடையின் `ஷோகேஸ்' கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன.

கடையில் இருந்த பொருட்களையும் ரோட்டில் வீசி எறிந்தனர். இந்த தாக்குதலின்போது கடை ஊழியர் முத்து (24) என்பவர் பலத்த காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடையை தாக்கியவர்கள், தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கேரளாகாரர்களுக்கு இது எச்சரிக்கை' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

தகவல் அறிந்ததும் தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் அங்கு விரைந்து சென்றார். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்...

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள கேரள ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்டவைகள் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. மேலும் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. இதே போன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும் கேரள கடைகளை அடைக்கச் சொல்லி குமாரபாளையம் ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் ஆகியோர் மிரட்டல் விடுத்ததை அடுத்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தஞ்சையிலும் கேரள கடைகள் அடித்து நொக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தமிழக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக இந்த கடை உடைப்பு என தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment