Wednesday,December,07,2011காபூல் : ஆப்கனில் நேற்று நடந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ ஜாங்வி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அபுல்பசல் மசூதியில் நேற்று மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான ஷியா பிரிவு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். இந்த மசூதி வாயிலில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதே போல மசார் இ ஷெரீப் நகரில் உள்ள மசூதியிலும் நேற்று குண்டு வெடித்தது. இந்த இரண்டு தாக்குதல்களும் தற்கொலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் ஆகும். மூன்றாவதாக காந்தகார் நகரிலும் குண்டு வெடித்தது.
காபூல் மசூதி குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் உள்பட 59 பேர் பலியாயினர். 130 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மசார் இ ஷெரீப் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் பலியாயினர். 20 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காந்தகாரில் மோட்டார் பைக்கில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீவிரவாத அமைப்பு அல்கய்தா மற்றும் தலிபான் தீவிரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். சன்னி பிரிவினரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பாகிஸ்தானில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஆப்கன் குண்டுவெடிப்புக்கு அதிபர் ஹமீத் கர்சாய், அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐநா பொதுசெயலாளர் பான் கி மூன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment