Wednesday, December 7, 2011

2ம்-இணைப்பு-மதுரை டவுன் பஸ்சில் டைம்பாம் சிக்கியது இலங்கை அகதி நிஷாந்திடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை : மேலூர் அருகே பரபரப்பு!

Wednesday,December,07,2011
மேலூர் : அரசு டவுன் பஸ்சில் வைக்கப்பட்டிருந்த அதிநவீன டைம்பாம் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்ததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து மேலூர் அருகே உள்ள திருவாதவூருக்கு இன்று காலை 6 மணிக்கு அரசு டவுன் பஸ் சென்றது. இந்த பஸ் காலை 7.20 மணிக்கு திருவாதவூரிலிருந்து மீண்டும் பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு புறப்பட்டது. பஸ்சில் 30 பயணிகள் பயணம் செய்தனர். கண்டக்டர் விருமாண்டி டிக்கெட் வழங்கிக் கொண்டே கடைசி இருக்கை அருகே வந்தார். அப்போது அவரது காலில் ஒரு பாலிதீன் பை தட்டுப்பட்டது. அதை எடுத்துப் பார்த்த கண்டக்டர் அதில் பேட்டரி, வயருடன் இணைக்கப்பட்ட ஒரு டிபன் பாக்ஸ் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். அப்போது பஸ் திருவாதவூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம் வந்தது. அந்த முகாமை சேர்ந்த நிஷாந்த்(25) என்பவர் பஸ்சில் ஏறினார். அவரிடம் பாலிதீன் பையை கொடுத்த கண்டக்டர் அதை வெளியில் வீசிவிடும்படி கூறினார். நிஷாந்த் வீசிய பை முக்கம்பட்டி கண்மாயில் விழுந்தது.

பஸ் பயணிகளிடையே இத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பை விழுந்த கண்மாய் முன்பு ஏராளமானோர் கூடினர். தகவலறிந்த மேலூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் முக்கம்பட்டி கண்மாய்க்கு விரைந்தனர். அங்கு வீசப்பட்ட பையை ஆய்வு செய்தபோது 4 பேட்டரிகள் மோல்டு செய்யப்பட்டு இணைக்கப்பட்டிருந்தன. அந்த பேட்டரியில் இருந்து சென்ற வயர், கடிகாரத்தில் இணைக்கப்பட்டிருந்தது. கடிகாரத்திலிருந்து வயர் பச்சை கலர் பிளாஸ்டிக் டிபன்பாக்சிற்குள் இணைப்பு தரப்பட்டிருந்தது. அத்துடன் உருளைவடிவில் ஒரு அட்டைபெட்டி இருந்தது. அதனுள் வயர் இணைப்பு தரப்பட்டிருந்தது.

பேட்டரியுடன் இணைக்கப்பட்டிருந்த வயரை வெடிகுண்டு நிபுணர்கள் துண்டித்தனர். டிபன் பாக்சை திறந்து பார்த்தபோது 12 மணிக்கு குண்டு வெடிக்கும் வகையில் செய்திருந்தனர். வயருடன் ஸ்பிரிங் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. உருளை வடிவ அட்டைப்பெட்டியில் இணைக்கப்பட்ட வயரை துண்டித்து அதை பாதுகாப்புடன் திறந்து பார்த்தபோது அதில் வெடிமருந்து நிரப்பப்பட்டிருந்தது. வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் வகையில் அனைத்து பாகங்களையும் தனித்தனியாக போலீசார் பிரித்தனர். டைம்பாம் குறித்து வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:

சாதாரணமாக கடையில் கிடைக்கும் பேட்டரியாக இல்லாமல், மோல்டு செய்யப்பட்ட பேட்டரி பயன்படுத்தியுள்ளனர். ஆர்டிஎக்ஸ் வகை குண்டுகளை எப்படி டைம் பாம் வைத்து அமைப்பார்களோ, அதேபோல் மிகத்துல்லியாக இந்த டைம்பாம் தயாரிக்கப்பட்டுள்ளது. 12 மணிக்கு வெடிக்கும் வகையில் கடிகாரத்தில் நேரம் குறித்திருந்தனர். பேட்டரியுடன் ஒரு ஸ்பிரிங் இணைக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்பிரிங்கை யாராவது மிதித்தால் அப்போது ஏற்படும் அழுத்தத்தினால் வெப்பம் உண்டாகி அதன் மூலம் குண்டு வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது. திரியுடன் 200 கிராம்வரை வெடிபொருள் இருந்தது. இது பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் மருந்துபோல் இருந்தது. வெடிகுண்டை செயல் இழக்க செய்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

இந்த குண்டு பஸ்சில் வெடித்திருந்தால் பலத்த சேதத்தை உருவாக்கியிருக்கும். முன்பே கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர். இதுகுறித்து இலங்கை அகதிகள் முகாம் வாலிபர் நிஷாந்திடம் ஒத்தக்கடை போலீசார் மற்றும் எஸ்பி அஸ்ரா கார்க் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாட்டுத்தாவணி அருகே பஸ் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் ஒரு டைம்பாம் சிக்கியது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே மதுக்கடை அருகே ஒரு குண்டு வெடித்தது. இந்த சம்பவங்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பஸ் பயணிகளை குறிவைத்து சமீபத்தில் நடந்த 2வது சம்பவம் இது.

No comments:

Post a Comment