Sunday, December 04, 2011முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து சரத் பொன்சேகாவின் குடும்பத்தாரை சந்திக்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு வழங்குமாறு சரத் பொன்சேகாவின் குடும்பத்தார் நேரடியாக கோரிக்கை விடுத்தால் அது குறித்து கவனம் செலுத்த முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சரத் பொன்சேகாவின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் முறைப்பாடு செய்வதனை விடுத்து, நேரடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத்பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக, அவரது குடும்பத்தினர் வெள்ளை மாளிகையிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சர்வதேசத்தின் ஒத்துழைப்புடனே நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என சரத் பொன்சேகாவின் புதல்வி அப்சரா தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போது பந்துல ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வேறும் நாட்டு ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்வது எந்த வகையிலும் நியாமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்லாயிரம் மைல் தொலைவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு மகஜர்களை அனுப்பி வைக்காது, அனோமா பொன்சேகா நேரடியாக ஜனாதிபதியிடம் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரினால், அந்தக் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி அனுதாப அடிப்படையில் கவனம் செலுத்தக் கூடும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை அனோமா பின்பற்றக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பிரச்சினைகள் தொடர்பில், ரணில் விக்ரமசிங்க வெளிநாடுகளில் முறைப்பாடு செய்து வருகின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.ஏனைய உலகத் தலைவர்களை போன்று அல்லது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலகுவில் சந்திக்க முடியும், கொழும்பு மூன்றில் அமைந்துள்ள அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து சரத் பொன்சேகாவின் குடும்பத்தார் தமது கோரிக்கையை முன்வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் உறவினர் ஒருவரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி அனுமதியளி;த்தார் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஜனாதிபதி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக பதவி விகித்த காலத்தில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்ததாகவும் அப்போது அவரது தயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள நீதிமன்றின் உதவியை நாட நேரிட்டதாகவும் பந்துல ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் அமெரிக்கா தலையீடு செய்ய வேண்டுமென கோரி இணையம் ஊடாக கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் குடும்பத்தார் இந்த கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். ஒரு மாத காலத்திற்குள் 25000 கையொப்பங்கள் திரட்டப்பட்டால் உலகின் எந்தவொரு நாட்டிலிருந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்தும் அமெரிக்கா தலையீடு செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment