Tuesday, December 06, 2011பாராளுமன்ற உறுப்பினர்களான உபேக்ஷா சுவர்ணமாலி மற்றும் மனூஷ நாணயக்கார ஆகியோரை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலக்குவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு மேல் மாகாண சிவில் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி இக்ரம் மொஹமட் தனிப்பட்ட காரணங்களினால் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சார்பிலும் சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆஜராகியிருந்தார்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையால், ஐக்கிய தேசியக் கட்சி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக இதன்போது சட்டத்தரணி பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.
எனினும் இந்த விடயம் குறித்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டினார்.
மேன்முறையீடு மனு தொடர்பான விசாரணைகளை ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த எல்.ரீ.பீ. தெகிதெனிய மற்றும் எச்.சீ.ஜே மடவல ஆகிய நீதிபதிகள் குழாம். அதுவரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்ட உத்தரவு அமுலில் இருக்குமென தெரிவித்தது.
No comments:
Post a Comment