Saturday, December 10, 2011

சினிமாவை மிஞ்சும் சம்பவம்: போலி மனைவி-போலி வக்கீல்கள் மூலம் போலி விவாகரத்து; என்ஜினீயர் நடத்திய தில்லு முல்லு!

Saturday, December 10, 2011
கோவை: தில்லு முல்லு... இது ரஜினி சினிமாவுக்காக நடத்திய தில்லு முல்லு நாடகம். ஆனால் அதையும் மிஞ்சும் வகையில் கோவை கோர்ட்டில் அரங்கேற்றப்பட்ட தில்லு முல்லு காட்சிகள் இப்படியெல்லாம் `செட்அப்' செய்ய முடியுமா? என்று ஒட்டு மொத்த மக்களையும் வியப்பில் ஆழத்தி உள்ளது.

ஒரு மனைவியை பிரிவதற்காக போலி வக்கீல், போலி மனைவியை ஏற்பாடு செய்து என்ஜினீயர் ஒருவர் நடத்திய சினிமாவை மிஞ்சிய ஏமாற்று நாடகம் இதோ...

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சொர்ணலதா (வயது 32). எம்.பி.ஏ., எம்.பில். பட்டதாரியான இவருக்கும் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த என்ஜினீயரான சிவக்குமாருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

சொர்ணலதா சிங்கப்பூரில் ஆசிரியையாகவும், சிவக்குமார் ஆஸ்திரேலியாவில் என்ஜினீயராகவும் பணிபுரிந்தனர். 4 வருட குடும்ப வாழ்க்கைக்கு பின்னர் 2 பேரும் கோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

உறவினர்களின் சமாதானத்தை ஏற்று 2 பேரும் சேர்ந்து வாழ சம்மதித்தனர். இதனால் விவகாரத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது. சிவக்குமாரும், சொர்ணலதாவும் கோவையில் குடும்பம் நடத்தினர். ஒரு சில மாதங்களுக்கு பின்னர் சிவக்குமார் ஆஸ்திரேலியாவுக்கும், சொர்ணலதா சிங்கப்பூருக்கும் வேலைக்காக சென்றனர்.

இந்த நிலையில் 1-12-2011 அன்று சிவக்குமாருக்கு 2-வது திருமணம் நடைபெற இருந்த தகவல் சொர்ணலதாவுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் தனது தாயை தொடர்பு கொண்டு திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் சிவக்குமாரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு சிவக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வக்கீல்கள் என கூறி ரகுபதி, ஆனந்தராஜ் ஆகிய 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முதல் மனைவியிடம் இருந்து சிவக்குமார் விவகாரத்து பெற்றதற்கான கோர்ட்டு உத்தரவை காண்பித்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் சிவக்குமாரை விடுவித்தனர். அவர் திட்ட மிட்டப்படி பீளமேட்டை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகள் பூர்னேஸ்வரியை 2-வது திருமணம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சொர்ணலதா கோவைக்கு வந்தார்.

சிவக்குமாரின் வீட்டுக்கு சென்று முறையிட்டார். அப்போது அங்கு இருந்த சிவக்குமார், அவரது நண்பர் மாரிமுத்து ஆகியோர் இதுபற்றி வெளியில் சொன்னால் சொர்ணலதாவையும், அவரது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சொர்ணலதா இதுதொடர்பாக கோவை கமிஷனர் அமரேஷ்புஜாரியை சந்தித்து புகார் கொடுத்தார். புகாரில் போலி ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து கோர்ட்டில் விவாகரத்து பெற்று தனது கணவர் 2-வது திருமணம் செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீஸ் கமிஷனர் அமரேஷ்புஜாரி விசாரணை நடத்துமாறு சிங்காநல்லூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில் போலி வக்கீல்கள், போலி மனைவி உதவியுடன் சிவக்குமார் கோவை குடும்ப நலக்கோர்ட்டில் விவகாரத்து பெற்று 2-வது திருமணம் செய்தது தெரியவந்தது. அதன் பேரில் சிவக்குமார், போலி மனைவி, போலி வக்கீல்கள் ஆனந்தராஜ், ரகுபதி, சிவக்குமாரின் நண்பர் மாரிமுத்து ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது போலி ஆவணம் தயாரித்தல், 2-வது திருமணம் செய்தல், கோர்ட்டில் ஏமாற்றுதல், கொலை மிரட்டல், ஆள்மாறாட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸ் தேடுவதை அறிந்ததும் சிவக்குமார் உள்பட 5 பேரும் தலைமறைவாகி விட்டனர். சிவக்குமார் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிடலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் கோவை, சென்னை, பெங்களூர் ஆகிய விமான நிலையங்களுக்கு `லுக் அவுட் நோட்டீஸ்' தகவல் தெரிவித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவக்குமார் பெங்களூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற தகவலின் பேரில் அவரை தேடி அங்கும் போலீசார் விரைந்துள்ளனர். இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் அதிசயம் ஆகியோர் தலைமையிலான தனிப்படை பெங்களூர் சென்றுள்ளது.

இந்த வழக்கில் போலி மனைவி, போலி ஆவணம் தயாரிப்பு, போலி வக்கீல்கள் நியமனம் ஆகியவற்றுக்கு சிவக்குமார் ரூ.10 லட்சம் வரை செலவிட்டுள்ளதும் கோர்ட்டில் சிவக்குமாரின் மனைவியாக நடித்த பெண்ணுக்கு ரூ.15 ஆயிரம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

இந்த பணத்தை கோவை அருகே உள்ள காரமடையை சேர்ந்த பிரபல வக்கீல் ஒருவருக்கு சிவக்குமார் கொடுத்ததும், அந்த வக்கீல் மூலமே போலி மனைவி, போலி வக்கீல்கள் நியமிக்கப்பட்டதும், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. எனவே அந்த வக்கீலையும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் கோர்ட்டில் போலி மனைவியாக ஆஜர்படுத்தப்பட்ட அந்த பெண்ணை மும்தாஜ் என்ற புரோக்கர் அழைத்து வந்துள்ளார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமாவையும் மிஞ்சிய இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய பாணியில் இது சினிமாவானால் `தூள் கிளப்பும்' என்பது இளைஞர்கள் கருத்து.

No comments:

Post a Comment