Tuesday, December 6, 2011

பெரியாறு அணை பிரச்னை கடைகள் அடைப்பு; லாரிகள் நிறுத்தம்!

Tuesday, December 06, 2011
கூடலூர் : பெரியாறு பிரச்னையில், கேரளாவை சேர்ந்த அரசியல்வாதிகள் பீதியை கிளப்பி வருவதால், அங்கு தமிழர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இதனையடுத்து நேற்று தமிழக லாரி டிரைவர்கள், கேரளா செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. காய்கறி, பால் உள்ளிட்ட எந்த பொருளும் கேரளாவுக்கு செல்லவில்லை. தமிழர்களின் மீதான தாக்குதலை கண்டித்து, கூடலூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். எல்லையில் பதற்றம் நிலவுவதால் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் அனைத்து வாகனங்களும் கேரளாவுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

இருதினங்களுக்கு முன் கேரள இளைஞர் காங்கிரசார், பெரியாறு அணை தலைமதகு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவிக்க முயன்றனர். நேற்று முன்தினம் கேரள பாஜவினர் கூட்டமாக சென்று பேபி அணையை உடைக்க முயன்றனர். இதுபோன்ற சம்பவங்களால் அணைக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் தேனியில் இருந்து மளிகை பொருட்கள் ஏற்றிச் சென்று விட்டு திரும்பிய லாரியை குமுளியில் வழிமறித்து ஒரு கும்பல் உருட்டுக்கட்டைகளால் பயங்கரமாக தாக்கியது. லாரி கண்ணாடிகள், லைட்டுகளை உடை த்து எறிந்தனர். டிரை வரையும் சரமாரியாக தாக்கினர். அவர்களிடம் இருந்து தமிழக பகுதிக்குள் ஓடி லாரி டிரைவர் உயிர் தப்பினார்.

இத்தகவல் பரவியதால் தமிழக, கேரள எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. கேரள சென்று கொண்டிருந்த தமிழக லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. உயிருக்கு பாதுகாப்பில்லாததால் யாரும் கேரளா செல்ல மாட்டோம் என்று லாரி டிரைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான லாரிகள், வாகனங்கள் மலைச்சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பால், காய்கறிகள் உள்ளிட்ட எந்த பொருளும் கேரளா செல்லவில்லை.

தொடர்ந்து பதற்றம் அதிகரித்ததால், தமிழகத்தில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்களின் வாகனம் முதற்கொண்டு அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, சின்னமனூர், லோயர்கேம்ப், கம்பம்மெட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள செக்போஸ்ட்களில் வாகனங் களை போலீசார் நிறுத்தி வைத்தனர். தமிழகத்திலிருந்து அதிகாலையில் கேரளாவுக்கு தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப்கள் பாதி வழியில் திருப்பி விடப்பட்டன.

ஆனால், கேரளாவில் இருந்து மட்டும் ஒரு சில வாகனங்கள் தமிழகத்திற்கு வந்த வண்ணம் இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த கூடலூர் மற்றும் லோயர்கேம்ப் மக்கள், கேரள வாகனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி திடீர் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் கற்களை தூக்கி போட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு பின்னர் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் ஒவ்வொன்றாக கேரளா செல்ல அனுமதிக்கப்பட்டன.

இதனால், தமிழகம் வழியாக சபரிமலை சென்ற பிற மாநில பக்தர்களும் கடும் சிரமத்திற்குள்ளாயினர். தமிழகம், கேரளா இடையே அரசு பஸ் போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கம்பத்திலிருந்து அதிகாலையில் கேரள மாநிலம் ஏலப்பாறை செல்லும் பஸ்கள் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று மாலையிலும் கூடலூரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கூடலூர் மெயின் ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

உருவ பொம்மை எரிப்பு: தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து அறிந்தவுடன், கூடலூரில் பெரும்பாலான மக்கள் திரண்டனர். இவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதுடன், பிரச்னைகளை தூண்டிவிடு வதாக கூறி கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உருவபொம்மையை எரித்தனர். அப்போது, கூடலூரைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் செல்வபாண்டியன் (19), என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில், முதலுதவி அளிக்கப்பட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கம்பத்தில் கடைகள் அடைப்பு: இந்த பிரச்னைக்கு ஆதரவாக கம்பம், கூடலூர் பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டன. நேற்று மாலையில், பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்திற்கு ஆதரவாக திடீரென கம்பத்தில் திறக்கப்பட்டிருந்த கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வந்தது.

சோதனை சாவடியில் முற்றுகை: நேற்று கம்பம் மெட்டு வழியாக தோட்ட வேலைக்கு செல்லும் ஜீப்புகளை வழிமறித்து இனி யாரும் கேரளா பகுதிக்கு வரக்கூடாது எனக்கூறி கேரளாவை சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை கேள்விபட்ட தமிழக இளைஞர்கள் சுமார் ஆயிரத்திற்கும், மேற்பட்டோர் கம்பம்மெட்டு சோதனை சாவடியில் கேரளாவுக்கு செல்லும்வாகனங்களை தடுத்தனர்.

கலெக்டருடன் பேச்சுவார்த்தை

கூடலூர் மேலத்தெருவை சேர்ந்தவர் லாரி உரிமையாளர் அண்ணாத்துரை(47). நேற்று டயர் வாங்குவதற்காக தேக்கடி கவலை பகுதிக்கு சென்றார். டயர் கடையில் இருந்த அண்ணாத்துரை தமிழர் என்பதால் திடீரென ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது. படுகாயத்துடன் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடி உயிர் தப்பினார். கம்பம் அரசு மருத்துவமனையில் அண்ணாத்துரை சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரளாவில் தோட்டவேலைக்குச்செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் செயல்படுவதாகவும், ஜீப்களை சிறைப்பிடித்து வைத்துள்ளதாகவும் தேனி கலெக்டருக்கு பல புகார்கள்சென்றன. இதைடுத்து இடுக்கிமாவட்ட கலெக்டருடன் பேசிய தேனி கலெக்டர், தோட்ட தொழிலாளர்களை பாதுகாப்பாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக, உத்தமபாளையத்தில் நடந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment