Tuesday, December 06, 2011சென்னை : இன்று பாபர் மசூதி இடிப்பு நாள் என்பதால், தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்கள் உட்பட மத்திய அரசு அலுவலகங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டிச.6ம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பதால், பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் பலத்த பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் ரயில் நிலையங்கள், பிஎஸ்என்எல் அலுவலகங்கள், அஞ்சலகங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறிப்பாக, கடந்த சில நாட்களாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, காட் பாடி, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், ரயில்வே அலுவலகங்களில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிகுண்டு அகற் றும் பிரிவினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். ரயில்கள் மூலம் பார்சல்கள் அனுப்பப்படுவதும், கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே ரயில் நிலையங்களுக்கு உள்ளே அனுப்பப்படுகின்றனர். இதனால் மாலை நேரங்களில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை.
மத்திய அரசு அலுவலகங்களான பிஎஸ்என் எல், அஞ்சல் துறைக்கு இன்று மொகரம் விடுமுறை. அதனால் அலுவலகங்கள், இணைப்பகங்கள், அஞ்சலகங்கள் மூடப்பட்டிருக்கும். ஆனாலும், கிள்ளியூர் சாலை, பூக்கடை, முத்துகுமார் சாலை உட்பட முக்கிய இடங்களில் இணைப்பகங்களுக்கு, நேற்று முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
மேலும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அலுவலகம், ராஜாஜி சாலை பொது அஞ்சலகம், அஞ்சல் பிரிப்பகங்கள் என தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய அலுவலகங்களுக்கு தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment