Tuesday, December 13, 2011இலங்கை::பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய செயற்படுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான அறிக்கையொன்றை மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலைச் சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று மீண்டும் இடம்பெற்றபோது மேலதிக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவைக் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வரலியெத்த நீதிமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டினார்.
அத்துடன் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு சர்வதேச பொலிஸாருக்கு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாட்டினுடாக அநேகமான நாடுகளில் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வரலியெத்த நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய, துமிந்த சில்வா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துமிந்த சில்வா சார்பில் ஆஜராகுமாறு யார் அவரைப் பணித்தார் என்ற விடயம் தொடர்பாக இதுவரை நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment