Thursday, December 29, 2011

சினிமா இயக்குனர்களுக்கு கட்டணத்தில் சலுகை : பாரதிராஜா அறிக்கை!

Thursday,December 29, 2011
சென்னை::திரைப்பட இயக்குனர்களுக்கு சங்கம் சார்பில் கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் பாரதிராஜா, பொதுச் செயலாளர் அமீர், பொருளாளர் எஸ்.பி.ஜன நாதன் இணைந்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் இணை, துணை, உதவி மற்றும் இயக்குனர்கள் உறுப்பினர்களாக சேர்வதற்கு புதிய விதிமுறைகளும் புதிய கட்டண சலுகையையும் சங்க செயற்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி ஏற்கனவே நடைமுறையில் இருந்த உதவி இயக்குனருக்கான கட்டணம் ரூ25 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அசோசியேட் உறுப்பினர் என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டு அதன் கட்டணம் ரூ.2,500 ஆக அறிவிக்கப்படுகிறது. மாநில அரசு மற்றும் இந்திய அரசு திரைப்பட கல்லூரி மாணவர்கள், இந்தியன் பனோரமாவுக்கு தேர்வு பெற்றவர்கள், மாநில, மத்திய மற்றும் சர்வதேச அரசுகளில் சிறந்த குறும்படம், ஆவணப்படம், முழு நீளப்படம் இயக்கி விருது பெற்றவர்கள், ஏற்கனவே இருந்த தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 2ம் தேதி முதல் அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. திரைப்பட துறையில் இயக்குனர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் தவறாமல் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க உறுப்பினராகி சங்கத்தின் ஒத்துழைப்பை பெறவும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment