Wednesday, December 28, 2011

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சகலருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்படும்-ஜாலிய விக்ரமசூரிய!

Wednesday,December,28,2011
இலங்கை::யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சகலருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்படும் என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களில் பெயர் விபரங்கள் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும், சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணைகள் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான வொஷிங்டன் போஸ்ட் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு ரீதியான தீர்வே இலங்கைக்கு மிகவும் பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் மிகவும் காத்திரமான முறையில் விசாரணை
நடத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த வலயத்தில் வாழ்ந்த பொதுமக்களை பாதுகாப்பதில் படையினர் கூடுதல் கவனம் செலுத்தியதாகவும், இதன் காரணமாகவே மனிதாபிமான மீட்புப் பணிகளை பூர்த்தி செய்ய இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டிருக்காவிட்டால் நீண்ட காலம் யுத்தம் நடத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதனை மறுப்பதற்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளா விக்டோரியா நூலாண்ட் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

நூலாண்டின் கருத்து பிழையானது எனவும், இந்தக் கருத்து பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜாலிய விக்ரமசூரிய சுட்டிக்காட்யுள்ளார்.

நட்பு நாடான அமெரிக்கா இவ்வாறான கருத்தை வெளியிட்டமை கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் அமெரிக்கா மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் பாதகமான விமர்சனங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment