Tuesday, December,27, 2011திருவனந்தபுரம் : முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை தீர்க்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இது குறித்து திருச்சூரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழ்நாடு, கேரளா இடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். இந்தப் பிரச்னையை சுமூகமாக தீர்க்கவேண்டும் என்பதே கேரளாவிலுள்ள அனைவரது விருப்பமாகும். மேலும் இந்தப் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிலர் கூறுவது முற்றிலும் தவறாகும்.
மத்திய அரசு மேற்கொண்ட பல முயற்சிகள் இதுவரை எந்த பலனையும் அளிக்கவில்லை என்பதுதான் உண்மையாகும். ஆனாலும் அதனால் பின்வாங்காமல் இந்தப் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும். இந்த விவகாரத்தில் கேரளாவும், தமிழ்நாடும் வெவ்வேறு தீர்மானங்களைக் கொண்டுள்ளன. இதுதான் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாமல் இருக்க முக்கிய காரணம்.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இரு மாநிலங்களும் முயற்சிக்க வேண்டும். இரு மாநில தலைவர்களும் ஒரு மேஜை முன் அமர்ந்து பேசினால் நிச்சயம் பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால் இதற்கான முயற்சிகளில் தலைவர்கள் ஏன் ஈடுபட மறுக்கின்றனர் என்பது தான் புரியவில்லை.
மத்திய அரசு தலையிட்டு முல்லைப் பெரியாறு பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று தேசிய கட்சிகள் அனைத்தும் கூறுகின்றன. ஆனால் பிரச்னையை எப்படி தீர்க்கவேண்டும் என்பது குறித்து இதுவரை எந்த ஆலோசனைகளையும் யாரும் தெரிவிக்கவில்லை. இந்தப் பிரச்னையை தீர்ப்பது குறித்து எந்த கட்சிக்கும் தெளிவான நிலைப்பாடு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment