Tuesday, December 13, 2011

ஜனாதிபதிக்கு உள்துறை பரிந்துரை அப்சல் கருணை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்!

Tuesday, December 13, 2011
புதுடெல்லி : நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவின் கருணை மனுவை தள்ளுபடி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்திய ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பதவியேற்ற போது, சுமார் 29 கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தன. அவற்றில் 13 கருணை மனுக்களை இதுவரை பிரதிபா பாட்டீல் பரிசீலனை செய்து முடிவை அறிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மற்றவர்களின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள காஷ்மீரை சேர்ந்த அப்சல் குருவின் கருணை மனு உள்பட 16 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இதில் அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளது. கருணை மனுக்கள் விவகாரத்தில் ஜனாதிபதி தன்னிச்சையாக செயல்பட முடியாது. மத்திய அரசின் பரிந்துரைப்படிதான் நடக்க முடியும். இதை சுப்ரீம் கோர்ட் பல முறை உறுதி செய்துள்ளது. இதனால் அப்சல் குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிப்பது உறுதி. மேலும் தற்போது தகவல் அறியும் சட்ட உரிமை பொது மக்களுக்கு இருப்பதால் கருணை மனுக்களை நீண்ட நாளுக்கு கிடப்பிலும் போட முடியாது. இதனால் அப்சல் குரு கருணை மனு குறித்த முடிவு விரைவில் வெளியாகும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment