Wednesday, December 14, 2011

முல்லைப் பெரியாறு பிரச்னை தமிழக வியாபாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்!

Wednesday,December,14,2011
பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து 20 கிமீ தூரத்தில் கேரளாவின் கொழிஞ்சாம்பாறை உள்ளது. கொழிஞ்சாம்பாறை, அதன் அருகில் உள்ள புதுநகரம், நெம்மாரா, பாலக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் பொள்ளாச்சியை சேர்ந்த காய்கறி வியாபாரிகள் 10க்கும் மேற்பட்ட சரக்கு ஆட்டோக்களில் தினமும் காய்கறி கொண்டு சென்று 2 நாட்கள் அந்தப்பகுதியிலேயே தங்கி விற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பொள்ளாச்சி அடுத்த குஞ்சுபாளையத்தை சேர்ந்த நாகராஜன், மாரிமுத்து, ஆனந்த் ஆகியோர் கேரளா சென்றிருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நாளாகியும் திரும்ப வரவில்லை. அவர்களது செல்போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அவர்களது குடும்பத்தினர் மற்றும் சரக்கு ஆட்டோ காய்கறி வியாபாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு 3 பேரும் தங்கள் வாகனங்களுடன் பொள்ளாச்சி வந்து சேர்ந்தனர். அவர்கள் கூறுகையில், ‘‘நெம்மாரா பகுதியில் காய்கறி வியாபாரம் செய்தபோது அப்பகுதி மக்கள் ‘எங்கள் மாநில தண்ணீரை குடித்துவிட்டு எங்களுக்கே எதிராக செயல்படுகிறீர்களா‘ என்று கூறி எங்களை தாக்கினர். இனிமேல் இங்கு வரக்கூடாது என்று விரட்டியடித்தனர். அங்கிருந்து வரும் வழியெங்கும் பலர் தாக்க முற்பட்டதால் அவர்களிடமிருந்து தப்பி வருவதற்குள் பெரும் பாடாகிவிட்டது ‘‘என்று கண்ணீர் மல்க கூறினர்.

No comments:

Post a Comment