Tuesday, December 06, 2011மாவட்ட தொழில் முயற்சியாளர்கள் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் 2011-01-08 அன்று கண்டியில் நடைபெற்றபோது கிராமிய தொழில் முயற்சியாளர்கள் ஒன்றியம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கலந்துரையாடி தீர்வு காண்பதற்காக பிரதேச ரீதியாக தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கிடையில் கலந்துரையாடல்களை ஏற்படுத்துதல், அதனூடாக முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு பிரதேச செயலாளரின் விடயப்பரப்பிற்கு ஏற்றவாறு தீர்வுகளைக் காணுதல் போன்றவை இவ் ஒன்றியங்களை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கமாகும்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அங்குரார்ப்பணக் கூட்டம் கடந்த 2011-11-29ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் திரு.வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் அவர்கள் தலைமையுரை வழங்கினார்.
நேசமான சூழல் ஒன்றை உருவாக்குவதன் மூலமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதன்மூலம் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்த முடியும்’ என்ற கருத்தினை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கிராமிய தொழில் முயற்சியாளர்கள் ஒன்றியத்தின் பிரதேச வர்த்தக சம்மேளனத்தின் செயலாளரும் அநுராதபுர வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அத்தியட்சகருமான திரு.பி.வி.திஸநாயக்க அவர்கள் இவ் ஒன்றியத்தின் செயற்பாட்டு நுட்பம், ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் மற்றம் தொழில் முயற்சியாளர் ஒன்றியங்களை எவ்வாறு ஆரம்பிப்பது போன்ற பல விடயங்கள் அடங்கிய விளக்கத்தை அளித்ததோடு, ஏற்கனவே சில மாவட்டங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஒன்றியங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இக் கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.நெடுஞ்செழியன், பாரம்பரிய கைத்தொழில், சிறிய முதலீட்டாளர் அபிவிருத்தியின் மாவட்ட இணைப்பாளரான செல்வி.தங்கேஸ்வரி மற்றும் சகல பிரதேச செயலாளர்களும் கைத்தொழில் அபிவிருத்திச்சபை, சமுர்த்தி, கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment