Thursday, December 8, 2011

நாடாளுமன்றத்தில் தமிழக & கேரள எம்.பி.க்கள் கடும் மோதல்!

Thursday,December, 08, 2011
புதுடெல்லி : முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக & கேரள எம்பி.க்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் நேற்று நேரமில்லா நேரம் (ஜீரோ ஹவர்) நடந்தபோது, முல்லைப் பெரியாறு பிரச்னையை அதிமுக உறுப்பினர் மைத்ரே யன் கிளப்பினார். அப்போது, தமிழக & கேரள எம்பி.க்கள் இடையே காரசார வாதம் நடந்தது. அதன் விவரம் வருமாறு:
மைத்ரேயன் (அதிமுக) : முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி மக்களிடையே கேரள அரசு வீண் புரளியையும், பீதியையும் கிளப்பி வருகிறது.

அணை பகுதியில் 24 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக கேரள அரசு கூறுவது அப்பட்டமான பொய். 4 நிலநடுக்கம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. 116 ஆண்டு பழமையான இந்த அணை பாதுகாப்பாகவும், பலமாகவும் இருப்பதாக உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. எனவே, இதன் நீர்மட்டத்தை 120 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும். இதில், மத்திய அரசு தலையிட வேண்டும்.

திருச்சி சிவா (திமுக): பூகம்ப அபாய பகுதியில் அணை இருப்பதாக கூறப்படுவது அடிப்படையற்றது. சில விஷமிகள் அணையை சேதப்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே, அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையை நிறுத்தும்படி ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்): அணை பிரச்னையால் சட்டம் ஒழுங்கு கெடும் அபாயம் உள்ளது. அணை பிரச்னை பற்றி ஆராய முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான உயர்நிலை குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. கேரள அரசுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால், இந்த குழுவிடம் தெரிவிக்கலாம்.
டி.ராஜா (இந்திய கம்யூ.) : இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இந்த மக்களுக்கு இடையே மோதல் ஏற்படக்கூடிய எந்த செயலிலும் யாரும் ஈடுபடக் கூடாது. இரு மாநில முதல்வர்களை யும் அழைத்து பிரதமர் பேசினால்தான், இதற்கு சுமூக தீர்வு காண முடியும்.

டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட்): பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு குறைந்தளவு தண்ணீரே வருவதால், தமிழகத்தில் இரண்டு போகம் பயிர் தவறி விட்டது. தமிழக மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அணை தொடர்பாக நடக்கும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். சட்டம் & ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும். இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

பி.ஜே.குரியன் (காங்கிரஸ், கேரளா): 5 ரிக்டேர் புள்ளிக்கு அதிகமான பூகம்பத்தை அணை தாங்காது என்று ரூர்கி ஐஐடி நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே, பூகம்பத்தை தாங்கக் கூடிய புதிய அணையை கட்ட வேண்டும். இதனால், தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரில் ஒரு துளி கூட குறையாது. டி.என்.சீமா (மார்க்சிஸ்ட், கேரளா): இது, 30 லட்சம் மக்களின் வாழ்வா? சாவா? பிரச்னை. அணைக்கு ஆபத்து உள்ளது. நாங்கள் பீதியில் வாழ முடியாது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு மாநிலங்களவையில் இரு மாநில எம்பி.க்கள் இடையே விவாதம் நடந்தது. இதேபோல், மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது இந்த பிரச்னையை கேரளாவை சேர்ந்த இடுக்கி தொகுதி காங்கிரஸ் எம்பி பி.டி. தாமஸ், கோட்டயம் எம்பி ஜோஸ் கே.மணி (கேரள காங்கிரஸ்&எம்) ஆகியோர் கிளப்பினர்.

பெரியாறு அணை பகுதியில் கடந்த ஜூலை 26ம் தேதியில் இருந்து இதுவரை 26 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அணை உடைந்து விடும் என்ற அச்சத்தில் 4 மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருவில் நிற்கிறார்கள். அணைக்கு ஆபத்து ஏற்பட்டால், இடுக்கி மற்றும் அதன் அருகில் உள்ள மற்ற மாவட்டங்களை சேர்ந்த 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என்று தாமஸ் பேசினார். இதேபோல், மணியும் வலியுறுத்தினார். இவர்களின் பேச்சுக்கு திமுக, அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment