Monday, December 12, 2011இலங்கை::இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு பெறுவதில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே நாடு, ஒரே தேசம் என்ற கோட்பாட்டுக்கு உட்பட்டவகையில் அரசியல் அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்கு ஒற்றுமைப்படல் வேண்டும் என்று முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நிலையில் முன்னெடுக்கப்படும் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் முஸ்லிகள் பங்கு கொள்ளும் நிலை தொடர்பான மயக்கமான போக்கு அவதானிக்கப்படுகின்றது முஸ்லிம்கள சுமார் ஏழாயிரம் வரையான உயிர்களையும் பல ஆயிரம் கோடி சொத்துகளையும் இழந்ததன் பின்னரும் பேச்சு மேசைக்கு முஸ்லிகள் செல்லமுடியாத சூழ்நிலையே இன்றும் உள்ளது. இன்று இந்த விடயம் முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பிரதான கருப்பொருளாக விவாதிக்கப்பட்டுவரும் அளவுக்கு முஸ்லிம் சமூக நிறுவங்கள் இந்த விடயத்தில் போதுமான அக்கரை இன்றி இருப்பது தெளிவாக தெரிகின்றது .
இந்த நிலையில் இலங்கை முஸ்லிம்களின் பிரதான ஒரு அரசியல் நிறுவனமான முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய முஸ்லிம் கட்சிகள் நடைபெறும் அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் தாமும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று முழுஅளவிலான எந்தவொரு தாக்கமுள்ள வெளிப்பாட்டினையும் அரசாங்கத்திடம் அவைகள் முன் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருகின்றது. இது தொடர்பில் இலங்கை பெரும்பான்மை சமூகத்தை பரந்த அளவில் பிரதிநிதித்துவப் படுத்தும் அரச தரப்பும் வாய் திறந்ததாக தெரியவில்லை என்பது வேறுவிடயம். காரணம் எந்த அரசாங்கத்திடமும் நாம் எமது பிரச்சினைகளை சரியான அழுத்தத்துடன் ஒரு குரலாக முன்வைக்காதபோது அவர்களாக எமது பிரச்சினைகளை இனங்கண்டு எம்மை அழைத்து தீர்வுகளை தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ளது. ஆனால் முஸ்லிம்களும் தமிழர்களும் தமிழ் பேசும் ஒரு சமூகம் என்றும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்களும் அக்கறைகொண்டவர்கள் என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தெளிவான நிலைபாடு ஒன்றை முன்வைப்பதை திட்டமிட்டு தவிர்த்து வருகின்றது. இன்று வரை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பாரிய இழப்புகளுக்கு காரணம் தமிழ் சமூகம்தான் என்பதை தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்துவிடக் கூடாது. முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ஆனால் இலங்கையின் மூன்று பிரதான சமூகத்துடன் தொடர்பான தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பை சேர்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத் சார்ந்ததுள்ள போதும் அதை அரசு தரப்பு செய்ய முற்படவில்லை முஸ்லிம் தரப்பின் அழுத்தங்கள் இன்றி அரசு தரப்பு அதற்கு தானாக முற்படாது என்பதுதான் மீண்டும் உறுதிப்படுத்தப்படவேண்டிய எதார்த்தம் .
இந்த நிலையில் முஸ்லிம் அரசியலுக்காக ஒரு கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும். இந்தக் கூட்டு முன்னணி அரசியலுக்காக ஏனைய முஸ்லிம் கட்சிகளை அரவணைக்கவும் விட்டுக் கொடுக்கும் அரசியலை செய்யவும் அதற்கான பரஸ்பர புந்துணர்வு வேலைத் திட்டங்களில் ஈடுபடவும், அதற்காகக் குரல் கொடுக்கவும், பிரசாரம் செய்யவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் பசீர் சேகுதாவூத் முன்வைத்துள்ள கருத்து வரவேற்கதக்கதும் மிகவும் எதார்த்த பூர்வமான கோரிக்கையுமாகும்.
இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் இதற்கான நடத்தைபூர்வமான முயற்சிகளில் உடனடியாக இறங்கவேண்டும் , கோரிக்கைகளை முன்வைப்பது என்பதுடன் மட்டும் கடமை முடிந்து விட்டது என்று முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் செயல்படமுடியாது. அதற்கான நடைமுறைச்சாத்தியமான கள வேலைத்திட்டங்களை முன்வைத்து வெளிப்டையாக செயல்படவேண்டும். முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணியை தோற்று விக்க இலங்கை முஸ்லிம்களின் மிகவும் பிரதானமானதும் பலமானதுமான நிறுவனமாக உருப்பெற்று வரும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் ஆலோசனைகளை பெற்று அதன் ஊடாக முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணியை உருவாக்க உடடியாக நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் . அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவும் சமூகத்தின் அவசர வேலைத்திட்டங்களை இனங்கண்டு அதற்கு ஆதரவும் அனுசரணையும் வழங்க முன்வரவேண்டும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் வகிபாகம் மிக முக்கியமான ஒரு விடயமாக முஸ்லிம் சமூகத்தின் ஊடக நிறுவங்களினாலும் போதுமான அளவு பரப்புரை செய்யப்படாமை முஸ்லிம் சமூகத்தின் பிரதான ஏனைய நிறுவங்கள் கூட இந்த விடயத்தில் அசட்டையாக இருப்பதற்கு அது ஒரு பிரதான காரணமாக உள்ளது ஆகவே முஸ்லிம் சமூக நிறுவங்கள் அனைத்தும் சமூகத்தின் அவசர வேலைத்திட்டங்களை இனங்கண்டு அதற்கு தமது மட்டங்களில் முக்கியத்துவம் கொடுக்க உடனடியாக முன்வரவேண்டும் என்பதுடன் முஸ்லிம் நிறுவங்கள அனைத்தும் முஸ்லிம் சமூகத்தின் அவசர வேலைத்திட்டங்களை சரியாக இனங்காண்பதுடன் சமூகத்திற்கு இனங்காட்டவும் தயக்கம் காட்டக்கூடாது .
M. ஷாமில் முஹம்மட் .
No comments:
Post a Comment