Saturday, December 03, 2011இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கெட்டவர் அல்ல என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
தேசிய நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் போன்ற விடயங்களில் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ 'கெட்டவர் அல்ல' எனினும் அவரது குடும்பம் (சகோதரர்களான பெசில் மற்றும் கோதபாய) ஆகியோயோரே மஹிந்தவை இனவாதியாக மாற்றியுள்ளனர் என மங்கள குறிப்பிட்டார் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடுமையான இனவாத போக்குடைய நபர்களின் கைதியாக ஜனாதிபதி மாறிவிட்டார் என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மத நம்பிக்கைகளின் அடிப்படையில் கர்ம வினையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாசிற்கும் மங்கள சமரவீரவிற்கும் இடையில் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் விக்கிலீக்ஸ் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியிருந்தாலும் சரத் பொன்சேகாவிற்கு நாட்டை ஆட்சி செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா நாட்டின் பாதுகாப்பு துறையை மேற்பார்வை செய்யவே விரும்பியதாகவும், ஆட்சி அதிகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொன்சேகா தேர்தலில் வெற்றியீட்டியிருந்தால், குறிப்பாக நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என மங்கள குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சாரப் பணிகளின் போது சரத் பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடிய அபாயம் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment