Wednesday,December,28,2011இலங்கை::சர்வதேசத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் திருப்தி படுத்தும் நோக்கில் அரசாங்கம் அதிகாரப்பகிர்வினை மேற்கொள்ளக் கூடாது என மின்வலு எரிசக்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஏதேனும் அதிகாரப்பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டுமாயின் அது மக்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தமது எல்லையை மீறி பரிந்துரை செய்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு என்பது அரசியல் விவகாரம் என்றும், அது குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கருத்து வெளியிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு பக்கச் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் பற்றி குறிப்பிட்டுள்ள போதிலும் சிங்கள மக்கள் பற்றி எவ்வித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
புலிகளின் சர்வதேச வலையமைப்பு சமாதானத்திற்கு எவ்வாறான தடைகளை ஏற்படுத்தி வருகின்றது என்பது குறித்து ஆணைக்குழு கவனம் செலுத்தத் தவறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெடியவன், விநாயகம் போன்ற புலிச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விதி மீறல்களில் ஈடுபட்ட அரசாங்கப் படையினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு அல்லது சர்வதேச சட்டங்களின் கீழ் அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் சில விடயங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்ட அமைச்சர் ரணவக்க, பக்கச்சார்பற்றதும், துல்லியமானதுமான முதல் அறிக்கையாக தாம் இதனைக் கருதுவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment