Thursday,December, 08, 2011சென்னை : முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அணையை பாதுகாக்க செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக கேரளாவில் உள்ள கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் சேதப்படுத்தப்படுகிறது. கேரளாவில் தமிழர்களும், தமிழர்களின் வாகனங்களும் தாக்கப்படும் செய்தி கேள்விப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கேரள வர்த்தக நிறுவனங்கள் மீதும் சில தமிழக அமைப்புகள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட தொடங்கியது.
இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் சில பகுதியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் கேரள எல்லை பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பல இடங்களில் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. ‘அரசியல் லாபத்துக்காக பரப்பப்படும் பீதியே கேரள வன்முறைக்கு காரணம். அரசியல் தலைவர்கள் இரு மாநில உறவை பாதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டாம்‘ என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் கேட்டுக் கொண்டார். ஆனாலும் நேற்றும், சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தது.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று மாலை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ரமேஷ்ராம்மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார், தமிழக டிஜிபி ராமாஜனும் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழக & கேரள எல்லை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு, ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைப்பது, முல்லைப் பெரியாறு அணை அருகில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க அதிரப்படை பாதுகாப்பு அளிப்பது,
அணை அருகே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு அளிப்பது மற்றும் ஜிபிஎஸ் (சாடிலைட்) தொழில்நுட்ப உதவியுடன் அணை பகுதியை தொடர்ந்து கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அணையை பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையை அமர்த்த வேண்டும் என்று மத்திய அரசை ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். ஆனால், மத்திய அரசிடம் இருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லை என்பதால், பாதுகாப்பு தொடர்பாக அதிரடியாக ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment