Monday, December 05, 2011இஸ்லாமாபாத்: கெடு முடிவடைவதை தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் ஆக தொடங்கியுள்ளன. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' படைகள் குண்டு வீசி தாக்கின. அதில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் உணவு பொருட்கள் மற்றும் எரி பொருட்களை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தியது. பாகிஸ்தான் மலைப் பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை வீசி அழிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதற்காக பாகிஸ்தான் பலுசிஸ்தானில் உள்ள “ஹாம்சி” விமானப்படை தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அங்கு அமெரிக்க படைகள் தங்கியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து வருகிற 11-ந் தேதிக்குள் அமெரிக்க ராணுவம் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுடன் சமரசம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது பயனளிக்கவில்லை.
ராணுவம் வெளியேற பாகிஸ்தான் விதித்த கெடுவும் நெருங்குகிறது. எனவே அமெரிக்க ராணுவம் “ஷாப்சி” விமானப்படை தளத்தில் இருந்து வாபஸ் பெறும் பணி தொடங்கியது. நேற்று முதல் அதற்கான பணி தொடங்கியது. இதைத்தொடர்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. எனவே விமானப்படை தளத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதை சுற்றி தங்கியிருக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் “ஷாப்சி” விமான தளத்துக்கு செல்லும் ரோடுகள் அடைக்கப்பட்டன.
No comments:
Post a Comment