Monday, December 05, 2011நெல்லை : தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன், அல் உம்மா, சிமி ஆகியவற்றின் தீவிரவாதிகள் பிடிப்பட்டதையடுத்து இவர்களுடன் தொடர்பு கொண்ட அமைப்புகள் மற்றும் அவர்களுக்கு பண உதவி செய்பவர்கள் பட்டியலை தயாரிக்க மத்திய, மாநில உளவு துறையினர் களத்தில் இறங்கியுள்ளனர். மதுரையில் இருந்து ரதயாத்திரை செல்லும் வழியில் பாஜ தலைவர் அத்வானியை திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப்பாலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி சக்திவாய்ந்த பைப் வெடிகுண்டு மூலம் கொல்ல சதி நடந்தது. இதை போலீசார் முறியடித்து வெடிகுண்டை கைப்பற்றி செயல் இழக்கச் செய்தனர். இதுகுறித்து சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்குப்பதிவு செய்து, மதுரையை சேர்ந்த அப்துல்லா, சிம்மக்கல்லை சேர்ந்த இஸ்மத் ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான அல் உம்மா இயக்கத்தை சேர்ந்த போலீஸ் பக்ரூதீன் மற்றும் 13 பேரை தேடி வருகின்றனர்.
இதனையடுத்து தமிழக டிஜிபி ராமானுஜம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜார்ஜ் மற்றும் உளவு துறை உயரதிகாரிகள் ஆகியோர் தமிழகத்தில் பழைய, புதிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், அவர்களுக்கு மறைமுகமாக பண உதவி செய்பவர்கள், வெளிநாடுகளிலிருந்து அந்த அமைப்பினருக்கு பணத்தை அனுப்புபவர்கள் ஆகியோரின் பட்டியலை தயாரிக்க போலீசார் மற்றும் உளவு துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து தமிழக முழுவதும் உளவு துறையினர் மற்றும் போலீசார் அதற்கான பட்டியல்களை சேகரித்து வருகின்றனர். மேலும் இது போன்ற பட்டியலை தயாரிக்க மத்திய அரசின் பல்வேறு உளவு துறையினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment