Tuesday, December,27, 2011உத்தமபாளையம்: முல்லை பெரியாறு பிரச்னையில் போராட்டங்கள் வெடிக்கும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளதால், கேரளாவுக்கு அரசு பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்தன. தேனி, கம்பம், கூடலூர் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு எல்லை முற்றுகை போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தால் இறைச்சி, காய்கறிகள், அரிசி என அத்தியாவசிய பொருட்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் கேரளாவில் இப்பொருட்களுக் கான விலை உயர்ந்துள்ளது.
இப்போது கேரளாவில் சகஜ நிலை திரும்பி விட்டது என்று அந்த மாநில அரசு கூறியுள்ளது. ஆனால், கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த முத்துசெல்வம்(23) என்ற வாலிபர் நேற்று கேரளாவில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். தமிழக எல்லைக்கு ஓடி வந்து அவர் உயிர் தப்பினார். இதனால், அணை பிரச்னையில் தீர்வு காணும் வரை பஸ்களை இயக்க கூடாது என்று பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வக்கீல் சங்கத்தினர் இன்று எல்லை முற்றுகை போராட்டம் அறிவித்தனர். இந்நிலையில், பஸ்களை இயக்கினால், மீண்டும் போராட்டம் பெரிதாகலாம் என்று உளவுத்துறையும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து இன்று தேனி மாவட்டம் கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி வழியாக கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தேனி மாவட்டம் முழுவதும் இன்றும் கேரள அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்தன.
No comments:
Post a Comment